வடமாகாணத்தின் முக்கிய அரச வைத்தியசாலையான யாழ். போதனா வைத்தியசாலையில் இரத்தத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். புதுவருடம் மற்றும் தைப்பொங்கல் தினங்களை முன்னிட்டு வழமையாக இரத்ததானம் வழங்கும் குருதிக் கொடையாளர்கள் மற்றும் இரத்ததான நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி நடாத்தும் பல்வேறு பொது அமைப்புக்கள் இரத்ததானம் வழங்குவதை இடைநிறுத்தியுள்ளமையே தட்டுப்பாட்டிற்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். போதனா வைத்தியசாலையில் தினம் தோறும் பல நூற்றுக் கணக்கான நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நிலையில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, பிரசவச் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு இரத்தத்துக்கான தேவை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகிறது.
இரத்தத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவிற்கு இரத்தம் வழங்குவதை யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவு மட்டுப்படுத்தியுள்ளது.
இதனால், வடமாகாணத்தில் புற்றுநோய்ச் சிகிச்சைக்காக இயங்கும் ஒரேயொரு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளர்கள், மற்றும் வைத்தியசாலையில் இடம்பெறும் கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவச் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, டெங்குக் காய்ச்சலுக்கான சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்நிலையில் தற்போதைய நிலமையைக் கருத்திற் கொண்டு வழமையாக இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்தும் பொது அமைப்புக்கள் அதிகமான குருதிக் கொடையாளர்களை ஒன்றிணைத்து முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்த முன்வர வேண்டும்.
மேலும், தனிப்பட்ட குருதிக் கொடையாளர்கள் வாரத்தில் அனைத்து நாட்களிலும் காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வைத்தியசாலை வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவிற்கு நேரடியாக வருகை தந்து இரத்ததானம் வழங்க முடியும். அத்துடன் தற்போதைய நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு புதிதாக இரத்தம் வழங்க இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை,நாடளாவிய ரீதியில் சேமிப்பிலுள்ள இரத்தத்தின் அளவு குறைவடைந்துள்ள காரணத்தால் உடனடியாக இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்துமாறு தேசிய இரத்தவங்கி மத்திய நிலையம் வடமாகாணத்திலுள்ள அனைத்து அரசாங்க வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவுகளையும் அறிவுறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment