//]]>

Thursday, January 4, 2018

தமிழரசுக் கட்சிக்கு தக்க பதிலடி கொடுத்த முதலமைச்சர்

எனது மாணவர் துரைராசசிங்கம் கிறிஸ்மஸ் தினத்தில் நான் ஒரு அரசியல் அறிக்கை விடுத்ததாக கூறியுள்ளார். அவர் வாராவாரம் மக்களின் கேள்விகளுக்கு நான் பத்திரிகைகளில் பதில் அளித்து வருவதை அறியாதுள்ளார் போல் தெரிகிறது. தேர்தல் வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அறிக்கை வெளியிடுவது வழமை என்றும் கூறியுள்ளார். இதுவும் தவறு. என்னைப் பற்றிய பல விமர்சனங்கள் தவணைக்குத் தவணை எழுவதால் தான் நான் பதில் கூற வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அவ்வாறான விமர்சனங்கள் தேர்தல்கள் வரும் போது எழுவதை வைத்து நான் வேண்டுமென்றே தேர்தல் காலங்களில் எதிர் அறிக்கைகளை விடுத்து வருகின்றேன் என்று கூறுவது சட்டத்தரணியான நண்பருக்கு அழகல்ல என வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

கடந்த வாரம் வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி- பதில் அளிக்கை அறிக்கைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் நீண்ட பதில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும்  வகையில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முதலாவதாக நான் தமிழரசுக் கட்சியைப் பிரத்தியேகமாகக் கண்டித்திருந்ததாகக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மற்றைய கட்சிகளும் அங்கம் வகிப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். அப்படி அல்ல.

தமிழரசுக் கட்சியினர் என்னை விமர்சனம் செய்வதாகவே சென்ற வாரக் கேள்வி அமைந்திருந்தது. அதனால் தான் அதற்குப் பதில் தர வேண்டியிருந்தது. அவ்வாறான கேள்வி என் மீது தொடுக்கப்படாதிருந்தால் நான் மௌனமாக இருந்திருப்பேன்.

என்னை விமர்சிப்பவர்கள் தமிழரசுக் கட்சியினரே என்றிருக்கும் போது அந்த விமர்சனங்களுக்குப் பதில் இறுக்காமல் வேறு யாருக்கு நான் பதில் அளிக்க வேண்டும் என்று நண்பர் அவர்கள் எதிர்பார்க்கின்றார்?

மேலும் தேர்தல் வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அறிக்கை வெளியிடுவது வழமை என்றும் கூறியுள்ளார். இதுவும் தவறு. என்னைப் பற்றிய பல விமர்சனங்கள் தவணைக்குத் தவணை எழுவதால் தான் நான் பதில் கூற வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

அவ்வாறான விமர்சனங்கள் தேர்தல்கள் வரும் போது எழுவதை வைத்து நான் வேண்டுமென்றே தேர்தல் காலங்களில் எதிர் அறிக்கைகளை விடுத்து வருகின்றேன் என்று கூறுவது சட்டத்தரணியான நண்பருக்கு அழகல்ல.

ஏதோ காத்திருந்து நான் அறிக்கை விடுவதாக என்னைச் சித்திரித்துள்ளார். அவ்வாறு அறிக்கைகள் விட வேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன். “கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்” மக்கள் கேளாது தட்டாது இருந்தால் நான் மௌனியாகிவிடுவேன்.

1. வவுனியாவில் என் பெயரை முன்மொழிந்தது தானே என்கின்றார். என் மாணவர் என்ற முறையில் அவ்வாறு செய்திருக்கலாம். அதற்கு நான் நன்றி கூற முடியாது. ஆறு மாதங்கள் அரசியலுக்கு வர முடியாது என்று தொடர்ந்து கூறியும் விட்டபாடில்லாததால் தான் எல்லோரும் சேர்ந்திருந்தழைத்தால் அவர்கள் கோரிக்கையைப் பரிசீலனை செய்வேன் என்று கூறி அவ்வாறு அவர்கள் கோரியதால்த்தான் நான் அரசியலுக்கு வர வேண்டியிருந்தது.

2. பேராசிரியர் சிற்றம்பலம் உண்மையில் வழிப்போக்கர்களைக் கட்சிக்குள் கொண்டுவராதீர்கள் என்று கூறினாரோ தெரியாது. அவ்வாறு கூறியிருந்தால் அதில் தவறென்ன? கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் அவர். படித்தவர். பண்புள்ளவர். அவரைப் புறந்தள்ளி வழிப்போக்கர்கள் குளிர்காயும் கட்சியாகத் தமிழரசுக் கட்சியை மாற்றியமை அவருக்கு ஆத்திரத்தை ஊட்டியிருக்கக்கூடும்.
நான் கட்சிகளின் அரவணைப்பில் வாழ்ந்தவன் அல்ல. என்னை கட்சிகளுக்குள் கட்டுப்பட வைக்க சற்றுக் கடினமாக இருக்கும். காரணம் கட்சி அரசியலே எமது நாட்டைச் சீரழித்துள்ளது என்ற கருத்தைக் கொண்டவன் நான். தம்பி மாவை கூட அண்மையில் கட்சி பேதம் பார்க்காமல் வாக்களியுங்கள் என்று கூறியதாகப் பத்திரிகைச் செய்தியொன்றை வாசித்தேன். கட்சிகளின் போக்கு கவலை தருவதாக அமைந்துள்ளது.

3. என்னைவிட அனந்தி கூடிய வாக்குகள் பெற்றுவிடுவார் என்ற கவலை அவர்களுக்கு இருந்ததாக நண்பர் கூறுகின்றார். அனந்தி கூடிய வாக்குகள் அவ்வாறு பெற்றிருந்தால் தமிழ் மக்கள் பெண்களை எந்தளவு மதிக்கின்றார்கள் என்பது தெரியவந்திருக்கும். அதில் என் மதிப்புக் குறைய எதுவுமே இருக்கவில்லை. ஒரு வேளை ஒரு பெண்ணிற்கு முதல்வர் பதவி கொடுக்கக்கூடாது என்ற பயத்தில் நண்பரும் மற்றவர்களும் காரியத்தில் இறங்கினார்களோ தெரியாது. இன்று மிக முக்கியமான அமைச்சுப் பதவிகளுக்குப் பொறுப்பாக இருந்து அனந்தி தனது கடமைகளைப் பொறுப்புடன் செய்து வருகின்றார்.

4. அடுத்து உயர் மட்டப் பதவியில் இருந்து வந்ததால் மக்களுடன் மக்களாக நான் மாறமுடியாது போய்விடும் என்று யாரோ கூறியதாகக் கூறினார். அந்தக் கூற்று இன்று மெய்யாகிவிட்டது என்றார். அவ்வாறு மெய்யானதால் தானா எனக்கு எதிராகத் தமிழரசுக் கட்சி நடவடிக்கைகள் எடுத்த போது, பொது மக்கள் முண்டி அடித்துக் கொண்டு வந்து எனது வாசஸ்தலத்திற்கு முன் நின்று எனக்குச் சார்பாகக் குரல் எழுப்பினார்கள்? நான் எந்த மட்டத்தில் இருந்து வந்தவன் என்பது அவர்களின் கரிசனையாக அமையவில்லை. இவன் எப்பேர்ப்பட்டவன் என்பதை அவர்கள் அலசி ஆராய்ந்தே சதிகளில் இருந்து என்னைக் காப்பாற்றினார்கள். நண்பருக்கு ஒன்று கூற விரும்புகின்றேன். நெஞ்சத்தில் அன்பிருந்தால் அதனைப் பொது மக்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியும். கேவலம் பறவைகளும் விலங்கினங்களும் எமது அன்பை அடையாளம் காண்கின்றன. மக்களால் முடியாதா?

5. அடுத்து கொழும்புடன் நல்லுறவைப் பேணவேண்டும் என்கின்றார் நண்பர். கொழும்பில் பிறந்து வளர்ந்தவன் நான். நாட்டின் பெரும்பாலான இடங்களில் நான் ஏதோ விதத்தில் தொடர்பு கொண்டிருந்தவன். நாட்டின் மூன்று மொழிகளுடனும் நான்கு மதங்களுடனும் ஓரளவு பரீட்சயம் பெற்றவன். எனவே தெற்குடன் நடந்துகொள்ள நண்பர் எனக்குச் சொல்லித்தரக்கூடாது.

நண்பர் போன்றவர்கள் தெற்குடன் நல்லெண்ணங்கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்குப் பணிந்து போக வேண்டும் என்ற கருத்தை உடையவர்களாகத் தென்படுகின்றார்கள். தெற்கிற்கு அடங்கிப் போகும் ஒருவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்திருந்தால் நண்பரைப் போன்ற ஒருவரையே முதலமைச்சராக நிறுத்தியிருக்கும்.

புகழ்பாடி, பணிந்து, இரந்து, எவரதும் பெரிய மனதின் பெறுபேறுகளைக் கொண்டு தமிழ் மக்களின் உரித்துக்களைப் பெற வேண்டிய அவசியம் எமக்கில்லை. தம்பி பிரபாகரன் அவர்கள் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால் மரணத்தையும்  தழுவியிருக்கலாம். ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் அவருக்கு என்றுமே இருந்ததில்லை.

நாம் இந்நாட்டின் மூத்த குடிகள். எமது தகைமை உலகறிந்தது. எனினும் அந்த உண்மையைக் கொழும்பு உதாசீனம் செய்து வருகின்றது. கொழும்புடன் முரண்படாது எவ்வாறு எமது உரிமையைப் பெற்றெடுப்பது? 2016ல் தக்க தீர்வைப் பெற்று விடுவோம் என்று முரண்படாது வாழ்ந்து வந்த எம் தலைவர் கூறினாரே! பெற்று விட்டோமா? ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடுற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்!

6. என் செயற்பாட்டால் வடமாகாணத்தின் மீது வினாக்குறி எழுந்துள்ளதாகக் கூறுகிறார். அதனால் தான் கட்சித் தலைமைகளைக் கூப்பிடாது எமது வடமாகாண முதல்வரை அழைத்து மலேசியப் பிரதம மந்திரி கருத்துப்பரிமாற்றம் அண்மையில் நடாத்தினாரா? அச்சந்திப்பை நிறுத்த சிலர் முயன்றதன் பின்னணி என்ன? வினாக்குறியா?

7. நான் மாகாண முதலமைச்சர்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்று யார் கூறினார்கள்? கலந்து கொண்டது மட்டுமல்லாமல் காத்திரமான கருத்துக்களையும் முன்வைத்ததைக் கூட்டக் குறிப்புக்கள் கூறுவன. ஏதோ ஒரு சில கூட்டங்களுக்குப் போக முடியாமற் போனதை ஒரு பொருட்டாகக் கருதி நண்பர் குற்றஞ் சுமத்துவது சிரிப்புக்கு இடமளிக்கின்றது.

ஆனால் ஒன்று மட்டும் சட்டத்தரணியான நண்பர் கருத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகாரங்களைக் கூட்டித்தர வேண்டும் என்று மற்றைய முதலமைச்சர்கள் கேட்பது ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் உள்ளேயே. அது எமக்கு அப்போதைக்கு ஒரு சில நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தாலும் எமது இனத்தின் நீண்டகால வாழ்க்கைக்கு நன்மை அளிக்காது.

அல்பிரட் துரையப்பாவோ, குமாரசூரியரோ, டக்ளஸ் தேவானந்தாவோ கேட்டார்கள் கொடுத்தோம் என்று தான் இருக்கும். தமிழர்கள் உரித்துடன் கேட்டதை நாம் அள்ளிக் கொடுத்தோம் என்றிருக்காது. இன்று நாம் தெற்கின் தயவிலேயே வாழ்கின்றோம். அதை நண்பர் உணராது உள்ளார். பல்லிளித்துப் பயன் பெறுவதென்றால் எந்தத் தமிழ்த் தலைவரிலும் பார்க்கக் கூடிய சலுகைகளை தெற்கில் இருந்து பெற விக்னேஸ்வரனால் முடியும்.

அவன் தெற்கில் பிறந்து வளர்ந்தவன். ஆனால் அவ்வாறு பல்லிளித்துப் பெற்றால் காலக்கிரமத்தில் எம்மவர் அடிமைகள் ஆகிவிடுவார்கள். சிங்களக் குடியேற்றங்கள், சிங்கள மொழி உள்ளீடல்கள், பௌத்த மதத்தினர் உள்ளீடல்கள் என்று எம்மை 25 வருடங்களில் இருந்த இடந்தெரியாது ஆக்கிவிடுவார்கள்.
நாமும் வெளிநாடுகள் நோக்கித் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்போம். ஜெருஸலத்திற்கு நடந்துள்ளதைப் பாருங்கள். ஆகவே எமது தனித்துவத்தைப் பேணிக் கொண்டு தான் நான் தெற்குடன் உறவாடி வருகின்றேன். பல தெற்கத்தைய அமைச்சர்களுடன் கூடி பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் எனக்குச் சமமானவர்களே. எனக்கு மேலானவர்கள் அல்ல. கூனிக் குறுகி அவர்களிடம் யாசகம் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை. பிரபாகரன் பிறந்த மண்ணில் இவ்வாறு யாசகம் பெற எத்தனிப்போர் வாழ்ந்து வருவது விந்தையே.

8. தமிழரசுக் கட்சியின் கூட்டங்களுக்கு எனக்கு அழைப்பு அனுப்பியதாகக் றுகின்றார்.கூட்டங்களில் நான் கலந்து கொண்டதாகவும் கூறுகின்றார். மதியத்துடன் எழுந்து சென்றுவிடுவார் என்றும் கூறியுள்ளார். கூட்டங்கள் உரியவற்றைப் பரிசீலித்தால், உரியன பற்றிப் பேசினால், உண்மையை உரைத்துப் பார்க்க முன் வந்தால் எவர் தான் பாதியில் எழுந்து போகப் போகின்றார்கள்?

ஆனால், ஒன்றை மட்டும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவை தொடங்கிய நாள் தொடக்கம் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை ஏற்றுள்ளார்.

உண்மையில் அதன் பிறகு தான் என்னை வலிந்து அழைத்திருக்க வேண்டும். அப்பொழுது எனதுகருத்துக்களை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருப்பேன். தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் சார் குரல், கட்சி அல்ல என்பதை விளங்கப்படுத்தியிருப்பேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப காலத்தில் கொழும்பில் அதற்கான குழுக்கள் கூட்டப்பட்டன.

அக் குழு உறுப்பினர்கள் சட்ட ரீதியான சில நன்மைகளை என்னிடம் பெற்றதுண்டு. அது பற்றி அவர்களிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம்.

என்னிடம் பெற்ற அந்த அடிப்படைத் தரவுகளை வைத்து கட்சி பதிவு செய்யப்பட்டதாகவே நான் எண்ணியிருந்தேன். அரசியலுக்குள் வந்த பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். அப்போது தான் TELO, EPRLF, PLOTE நண்பர் ஆனந்தசங்கரியின் கட்சி ஆகியன தமிழரசுக் கட்சியின் சின்னத்திற்குக் கீழேயே தேர்தலில் ஈடுபட்டு வருகின்றன என்பதைப் புரிந்து கொண்டேன்.

தமிழரசுக் கட்சியின் சின்னத்தின் கீழ் தான் போட்டியிடப் போகின்றோம் என்று அறிவதற்கு முன் நான் எவ்வாறு அது பற்றி அறிந்திருக்கக்கூடும் என்பதற்கு நண்பர் தான் பதில் தர வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment