மகாகவி பாரதியைப் போல ஒரு மாபெரும் கவிஞன் இதுவரை பிறந்ததுமில்லை. இனிப் பிறக்கப் போவதுமில்லை என சென்னை பாரதியார் சங்கத் தலைவர் முதுநிலை வழக்கறிஞர் இரா.காந்தி யாழில் முழங்கியுள்ளார்.
தமிழகத்தின் புகழ் பூத்த சென்னை பாரதியார் சங்கமும், யாழ்ப்பாணம் பாரதி மன்றமும் இணைந்து மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 135 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடாத்திய 'பாரதி விழா' நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) முற்பகல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு முழங்கியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
யாமறிந்த மொழிகளில் தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவும் வகை செய்ய வேண்டும். எங்களில் பலருக்கும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளே தெரியும். ஆனால், மகாகவி பாரதியாருக்கு ஒன்பது மொழிகள் தெரியும். இத்தனை மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற பாரதியாரே யாமறிந்த மொழிகளில் தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் எனத் தெரிவித்திருப்பது தமிழ்மொழியின் தனித்துவத்திற்குத் தக்க சான்று.
பல ஆண்டுகள் குழந்தைகள், நாடு, சுதந்திரம் என்பவற்றைப் பற்றிப் பாடிய பாரதியார் பெண்களைப் பற்றிப் பாடாமலேயே இருந்துவிட்டான். ஒரு சமயம் மாநாட்டு விழாவொன்றுக்குச் சென்ற விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா பாரதியாரைப் பார்த்து எங்கே உங்கள் மனைவி என்று கேட்டாள். பெண்களை இவ்வாறான விழாக்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கமில்லை எனப் பாரதியார் பதிலளித்தார். நாட்டின் 50 விழுக்காடுகளாகவுள்ள பெண்களை இவ்வாறான மாநாடுகளுக்கு அழைத்து வராவிடில் நாடு எவ்வாறு விடுதலை அடையும்? , நிவேதிதாவின் அந்த வார்த்தையைக் கேட்டுப் பாரதி விழித்துக் கொண்டான். அதன் பின்னர் பெண்மையைப் பற்றியும், பெண் விடுதலை தொடர்பிலும் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடினார்.
பாரதியாருக்கு ஒரு அக்கினிக் குஞ்சாக விளங்கிய நிவேதிதா என்ற பெண்மணியே பாரதியாருக்குத் தைரியத்தை ஏற்படுத்தி பெண் விடுதலைக்காகப் பல பாடல்கள் பாடுவதற்கு வித்திட்ட பெருமைக்குரியவர்.
இந்திய நாட்டின் எதிர்காலம் இளைஞர், இளம் பெண்களின் கைகளிலுள்ளது என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியுள்ளார். நாட்டினுடையதும், உங்களுடையதும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக மாணவர்களே கனவுகள் பல காணுங்கள். உயர்வான சிந்தனை கொண்ட கனவுகள் நிச்சயம் உங்கள் வாழ்வில் ஒருநாள் நனவாகும் என்றார்.
எங்கள் மண்ணிலே பிறந்து எங்கள் மக்களின் விடிவுக்காக, உலக மக்களின் நன்மைக்காகப் பாடிய மாபெரும் கவிஞனான மகாகவி பாரதியாரின் சிந்தனைகள் உலகமெங்கும் பரவ வேண்டுமென்பதே எங்கள் விருப்பமாகும். இதற்கான பல்வேறு முயற்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். இதன் ஒருகட்டமாகவே இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் பாரதிக்கு விழாவெடுக்கின்றோம். பாரதியார் கவிதைகளில் பொதிந்துள்ள பொருள் ஆழத்தை ஈழமக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.பாரதியார் கவிதைகளைப் பெற்றோர்கள் யாவரும் சிறுவயதிலேயே தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
0 comments:
Post a Comment