யாழ். மாவட்டத்தின் வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த பருத்தித்துறை-பொன்னாலை வீதி சுமார் இருபத்தெட்டு வருடங்களின் பின் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(06) காலை பொதுமக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட போதும் தற்போது குறித்த வீதி இழுத்து மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மயிலிட்டியில் நேற்று இடம்பெற்ற வீதித் திறப்பு நிகழ்வில் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாகப் போக்குவரத்துச் சபை பஸ் சேவையை ஆரம்பித்து வைத்திருந்தார்.
விடுவிக்கப்பட்ட வலி. வடக்குப் பகுதிப் பொதுமக்கள் தொடர்ச்சியாக விடுத்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம்(05) யாழில் வைத்து வழங்கிய வாக்குறுதிக்கமைவாக இந்த வீதி நேற்றைய தினம் காலை திறந்து வைக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த வீதி திறக்கப்பட்டதன் பின்னர் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போக்குவரத்துச் சபை பஸ் சேவை பின்னர் இடம்பெறவில்லை எனவும் அதன் பின்னர் குறித்த வீதி இராணுவத்தினரால் இழுத்து மூடப்பட்டுள்ளது.
சற்று முன்னர் வரை குறித்த வீதியால் போக்குவரத்துச் சபை பஸ்கள் எவையும் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை. இராணுவ வாகனங்கள் மாத்திரமே தீவிர கண்காணிப்பின் பின்னர் மேற்படி வீதியால் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
28 வருட காலமாக இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த இந்த வீதி திறக்கப்பட்டமையால் பொதுமக்கள் அடைந்திருந்த பெருமகிழ்ச்சி தற்போது பறிபோயுள்ளது. இதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசின் தேர்தல்கால ஏமாற்று நாடகம் அம்பலத்துக்கு வந்துள்ளதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளதாகவும் எமது விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment