கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு கோடி இலஞ்சம் பெற்றதாகக் கூறியுள்ள சிவசக்தி ஆனந்தன் ஒரு படிக்காத முட்டாள். அவர் கூறிய கருத்தை அங்கீகரித்த ஜி. எல். பீரிஸ் ஒரு படித்த முட்டாள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கைப் பிரதமரின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சுத் தலா இரண்டு கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகள் நடாத்த வேண்டுமெனவும், அல்லாவிடில் இதற்கெதிராகக் கூட்டு எதிரணி வழக்குத் தாக்கல் செய்யும் என மகிந்த ராஜபக் ஷ ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
ஒரு பேராசிரியராக விளங்கிய ஜி.எல். பீரிஸ் தற்போது அடிமட்டத்திலுள்ள ஒருவர் போன்று செயற்பட்டு வருகிறார். மகிந்த ராஜபக் ஷ ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கத்திற்கெதிராக நீதிமன்றத்தில் எத்தனையோ வழக்குகளை பதிவு செய்துள்ள போதிலும் அவர்களால் ஒரு வழக்கிலும் வெல்ல முடியவில்லை. இவ்வாறான நிலையில் அவர்கள் எங்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்வோம் எனத் தெரிவித்திருப்பது சிறுபிள்ளைத் தனமானதொன்று.
எங்கள் கைகளுக்கு வராத பணத்துக்கு யார் வழக்குப் போடுவது?, அபிவிருத்தித் திட்டங்களுக்காகப் பெறப்பட்ட நிதியை இலஞ்சம் எனக் கூறுவது எவ்வகையில் நியாயம்?, எனவே அவர்கள் வேண்டுமானால் எங்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யட்டும். அதனை எதிர்கொள்ள நாம் எப்போதும் தயாராகவேயுள்ளோம்.
எங்களுக்கு யாரிடமும் இலஞ்சம் வாங்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் கைகள் மிகவும் சுத்தமானவை. எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்மக்கள் எங்களுக்கு வழங்கவுள்ள ஒட்டுமொத்த ஆதரவு மூலம் மீண்டும் எமது பலத்தை நிரூபிப்போம்.
அபிவிருத்திக்காக எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி போன்று அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஜனாதிபதியால் 200 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில், இவை எந்த வகையான இலஞ்சம்? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment