//]]>

Sunday, January 14, 2018

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் தைப்பொங்கல் திருநாள்: சிறப்புக் கட்டுரை


சூரிய பகவான் தெட்சாயணம் என அழைக்கப்படும் தன் தென்திசைப் பயணத்தை மாற்றி உத்தராயணம் எனும் வடதிசைப் பயணத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கும் முதல் நாள் தைப்பொங்கல் திருநாளாகும். உத்தராயண காலம் தேவர்களின் பகற் பொழுதாகவும் மிக உயர்ந்த புண்ணிய காலமாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகத் தான் தேவர்களில் உயர்ந்தவனும், பகற் பொழுது தோன்றுவதற்குக் காரணனுமாகவுள்ள கதிரவனுக்குப் பொங்கல் பொங்கிப் படைத்து வழிபடுவதை எமது முன்னோர்கள் வழக்கமாகிக் கொண்டனர்.

ஆடி மாதத்தில் நெல் விதைப்பில் ஈடுபட்ட உழவர் பெருமக்கள் மார்கழி மாத முடிவில் நெல்லை அறுவடை செய்கின்றனர். வயலில் நெல் மணிகளை விளையச் செய்த சூரியபகவானுக்கு நன்றி செலுத்துவதற்காக தை முதலாம் நாளில் வீட்டிலே பூரண கும்பம் வைத்து, மங்கள விளக்கேற்றிப் புதிதாக அறுவடை செய்த நெல் மணிகளிலிருந்து பெறப்பட்ட அரிசியில் பொங்கல் பொங்கி வழிபடுவது தொன்று தொட்டு நிலவி வரும் மரபு.  நாம் உயிர் வாழ்வதற்குச் சோறும், நீரும் மிக முக்கியம் .இந்த இரண்டையும் தருபவன் சூரியபகவானை எமது முன்னோர்கள் தெய்வமாகவே கண்டனர்.

தமிழர்களின் தனித்துவ பண்டிகையான தைப்பொங்கலுக்குச் சிலநாட்களுக்கு முன்னரே கிராமங்களில் பொங்கல் பண்டிகை களைகட்ட ஆரம்பித்து விடும். வீடு மற்றும் சுற்றுப் புறச் சூழலை மக்கள் துப்பரவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பொங்கல் திருநாளுக்குத் தேவையான புதுப்பானை உட்படப் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவர்.

தைப்பொங்கலன்று அதிகாலை எழுந்து தலை முழுகி நீராடி வீட்டு முற்றத்தில் சாணத்தால் மெழுகி கோலமிடுவர். வாழை, மகர தோரணங்கள், மாவிலைகள் போன்ற மங்களப் பொருட்களால் வீட்டை அலங்காரம் செய்வர். கோலத்தின் நடுவே மூன்று கல் வைத்து அதன் மேல் நீர் வார்த்த புதுப்பானை வைப்பார்கள். புதுப்பானையில் கழுத்தில் மூன்று அல்லது ஐந்து மாவிலைகள் காட்டுவார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவர், தலைவி, பிள்ளைகள், உறவுகள் ஆகியோர் ஒன்று கூடி "பொங்கலோ பொங்கல்" என உரக்கக் கூவி சூரிய பகவானுக்கு வணக்கம் செலுத்தியவாறு இருகைகளாலும் புத்தரிசியைக் கோலி அள்ளிப் புதுப்பானையில் இடுவர். அதன் பின்னர்  பால், பயறு, சர்க்கரை,தேன், முந்திரி வற்றல் முதலியன கலந்து பொங்கலிடுவார்கள்.பொங்கல் பொங்கி வர சிறுவர்கள் வெடி கொளுத்தி மகிழ்வார்கள். 

கரும்பு, இஞ்சி, மஞ்சள் போன்றவையும் பொங்கல் பண்டிகையில் பங்குபெறுகின்றன. வாழ்க்கை இனிமை நிறைந்ததாக அமைய வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக சர்க்கரை பொங்கலுடன் கலக்கிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. இந்த முதுமொழிக்கு எம் மத்தியில் பல்வேறு பொருள்கள் கொள்ளப்பட்டாலும் இந்த முதுமொழிக்குப் பொருத்தமான காரணமொன்றுமுள்ளது. பண்டைக் காலத்தில் கிராமத்தின் பிரதான வீதி குடியிருப்புக்களையும், வயல் நிலங்களையும் ஊடறுத்துச் செல்வதாக அமைந்திருந்த நிலையில் நெல் அறுவடை ஆரம்பித்த பின் வயல் நிலங்களுடாகச் செல்லும் பிரதான வீதிக்கான கிராமத்திலிருந்தான குறுக்கு வழி அறுவடை செய்த வயல் வெளியூடாகப் பிறக்கும் என்பதே அது.  நல்ல கணவர் தமக்கு வாழ்க்கைத் துணையாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கும் கன்னிப் பெண்களுக்குத் தை பிறந்த பின்னரே சுப செய்திகள் தேடி வரும் என்பதுவும், வெற்றிகரமான அறுவடை அமைய வேண்டும் என எதிர்பார்க்கும் உழவனுக்குத் தை பிறந்த பின்னரே அறுவடை அமையும் என்பதாலும் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' எனவும் கொள்ளப்படுகிறது.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்பது மக்கள் புலவன் மகாகவி பாரதியாரின் பொன் வாக்கு. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தக் கஷ்டப்பட்டு உழைக்கும் தமிழர்கள் தமது உழைப்பிற்கு உறுதுணையாக அமைந்த சூரியபகவான், பூமி  முதலான இயற்கைக் சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைக்கும் கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாகவே தை மாதம் முதலாம் நாளில் காலம் காலமாகப் பொங்கல் பொங்கி வழிபடாற்றி வந்துள்ளதாக அறிய முடிகிறது. இதன் மூலம் தமிழ்மக்களின் தொன்மை மரபாக நன்றியுணர்வு இருந்து வந்துள்ளமையும் தமிழர்களின் தனித்துவத்திற்குத் தக்க சான்று.

தைத் திருநாள் தமிழ்மக்களின் பண்பாட்டு விழுமியங்களையும்,பாரம்பரிய சம்பிரதாயங்களையும் வெளிப்படுத்தி நிற்கும் ஒரு பண்டிகை.  தமிழ்மக்களின் பண்பாட்டின் செழுமைக்கு உறுதுணையான திருநாள். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நன்நாள். கணனி யுகமான தற்காலத்தில் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடும் முறைகளில் பல இடங்களில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கிராமங்களில் மண் வாசனை மாறாத பொங்கல் பண்டிகை இன்று வரை கொண்டாடப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

மனித மனங்களில் தீய எண்ணங்கள் நிறைந்திருந்தால் மனிதனால் துன்பத்தைத் தவிர இன்பத்தை அனுபவிக்க முடியாது. நான் என்ற ஆணவத்தையும், எனது என்ற மமதையையும் எம்மிலிருந்து அறவே அகற்றித் தைத்திருநாளில் இல்லமெல்லாம் சந்தோசம் தழைத்தோங்க ஒன்றிணைவோம். எல்லோரது வாழ்வும் நன்றாக அமைய எந்நாளும் இறையருளைப் பிரார்த்திப்போம்.

(கட்டுரையாக்கம்:- செல்வநாயகம் ரவிசாந்)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment