யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் முன்னாள் பெருந்தலைவர் சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி- தங்கம்மா அப்பாக்குட்டியின் 93 ஆவது பிறந்தநாள் அறக்கொடை விழா நாளை ஞாயிற்றுக்கிழமை(07) காலை-08.30 மணி முதல் தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவில் இலங்கையின் இளைப்பாறிய பிரதம நீதியரசர் க. ஸ்ரீபவன் தம்பதிகள் பிரதம விருந்தினராகவும், அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
காலை-08.30 மணிக்குத் துர்க்காதேவி ஆலயத்தில் விசேட ஆராதனைகளுடன் ஆரம்பமாகும் விழாவில் சிவத்தமிழ்ச் செல்வி நினைவாலய வழிபாடு, திருவுருவச் சிலை முன் பிரார்த்தனை என்பன இடம்பெறும். அதனைத் தொடர்ந்து அன்னையின் பிறந்தநாள் அறக் கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.
அத்துடன் சான்றோர்கள் ஐவர் விசேடமாகச் 'சிவத்தமிழ் விருது' வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளனர்.
அனைவரையும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment