//]]>

Tuesday, February 27, 2018

நானும் திருப்பி அடிப்பேன்: தமிழரசுக்கட்சியை பகிரங்கமாக எச்சரித்த அனந்தி சசிதரன்!

சும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி அரசியலில் இணைத்து விட்டுத் தமிழரசுக் கட்சி என் மீது அடாத்தான செயற்பாடுகளை மேற்கொள்வது, ஜனநாயகமற்றது. இனிமேல், நானும் சும்மா இருக்கப்போவதில்லை. என் பலம் எதுவென அனைவரும் உணரும் தருணம் இது.  நான் உயிருக்குப் பயப்படுபவள் அல்ல. நானும் திருப்பி அடிப்பேன் என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற  தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சியிலிருந்து  அனந்தி சசிதரனை நீக்குவதென முடிவெடுத்துள்ளமை தொடர்பில் இன்று(27) கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்பத்திலிருந்தே தமிழரசுக்கட்சி என் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அதனை நான் தான் புரிந்து கொள்ளவில்லை, என் வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதல், என் மீதான அச்சுறுத்தல் என அனைத்தையுமே தமிழரசுக்கட்சி தான் மேற்கொண்டுள்ளது.

இவர்கள் இவ்வாறிருந்து கொண்டு இதர கட்சியினரை குற்றஞ்சாட்டுவதை நிறுத்த வேண்டும்.இனிமேல் என்னால் அரசியலிலிருந்து விலகி சாதாரண ஒரு வாழ்க்கையைத் தொடரமுடியாது. காரணம், பின்புலத்தில் எனக்கு பாதுகாப்பு பிரச்சினை என்பது பாரதூரமானதாகவுள்ளது. இதனை நன்கு அறிந்துள்ள கட்சி இவ்வாறு என்மீது தாக்குதல் மேற்கொள்ள முனைவது ஜனநாயகம் அற்றது.

நான் அரசியலை வடிவாகப் படித்துவிட்டேன். கட்சி என் மீது மேற்கொண்ட குற்றங்கள், தாக்குதல்கள் நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு விரைவில் தெளிவுபடுத்துவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(தமிழின் தோழன்-)







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment