//]]>

Monday, November 28, 2016

யாழில் 200 தலைப்புக்களில் விரிவுரையாற்றிய கனடா சைவசித்தாந்த பீட இயக்குனர்(Photos)


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சைவசமயப் பிரசாரகர்களுக்கான விசேட ஆன்மீகத் தலைமைத்துவப் பயிற்சி நெறி நேற்று முன்தினம் சனிக்கிழமையும், நேற்று ஞாயிற்றுக்கிழமையும் யாழில் இடம்பெற்றது.இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரனின் வழிப்படுத்தலில் இந்தப் பயிற்சி நெறி நடாத்தப்பட்டது. 

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை - 09 மணியளவில் யாழ். ஆனைப்பந்தியிலுள்ள குருகுல மண்டபத்தில் மேற்படி பயிற்சி நெறி ஆரம்பமாகியது. இந்தத் தலைமைத்துவப் பயிற்சி நெறியில் கனடாவிலிருந்து வருகை  தந்த சைவசித்தாந்த பீடத்தின் இயக்குனர் வைத்திகலாநிதி ஆ. லம்போதரன் வளவாளராகக் கலந்து கொண்டு விரிவுரையாற்றினார். 

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் இந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி- மா. அனந்தலட்சுமியின் இறைவணக்கம் நிகழ்த்தினார். அறிமுகவுரையை ஆறுமுகநாவலர் மணிமண்டப இந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. கே.சுதாகரன் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து விசேடஆன்மீக விரிவுரை நடைபெற்றது. 

இந்த விசேட ஆன்மீகத் தலைமைத்துவப் பயிற்சி நெறியின் முதல் நாளில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் சைவப்பிரசாரகர் பயிற்சி நெறியில் பயிற்சி பெற்று வரும் இளம் சைவப்பிரசாரகர்களுடன், சைவ சித்தாந்த வழித் தமிழ்ப் பூசகர்களான பிரம்மச்சாரி கிருஷ்ணன் ஜீ,  பிரம்மச்சாரி இலக்கீசன் ஜீ, மற்றும் பேராசிரியர் ம. சண்முகதாஸ் தம்பதிகள், இந்து சமய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆன்மீக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

நேற்று முன்தினம் ஆரம்பமாகிய விசேட ஆன்மீகத் தலைமைத்துவப் பயிற்சி நெறி காலை- 09 மணியிலிருந்து பிற்பகல்-04 மணி வரை இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது. இந்தப் பயிற்சி நெறியில் இந்துக்களின் காலக் கணிப்பு, இந்துக்களின் அண்டவியல், சமயமும் விஞ்ஞானமும், கடவுளுடன் உறவு கொண்டாடுவது எப்படி?யார் பிராமணன், அந்தணர் அல்லாதவர் ஆலய பூஜை செய்யலாமா?, ஆலய அமைப்பு-மனித உடலின் அற்புத விளக்கம், ஆலயங்களின் பணி சமூக ஒழுங்கா?மக்கள் சேவையா?மகேசன் பணியா? உள்ளிட்ட 200 தலைப்புக்களில் விரிவுரைகள் ஆற்றப்பட்டன. 

இதன்போது சைவசமயப் பிரசாரகர்களுக்குக் காணொளி மூலமும் விளக்கமளித்த கனடா சைவசித்தாந்த பீட இயக்குனர் சைவசமயத்திலுள்ள பல்வேறு விடயப் பரப்புக்கள் தொடர்பிலான பல்வேறு ஐயங்களுக்கும் தெளிவான விளக்கமளித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment