//]]>

Friday, November 18, 2016

நல்லொழுக்கத்திற்கும், ஆன்ம ஈடேற்றத்திற்கும் வழி வகுப்பதே கல்வி: நாவலருக்கு வடக்கு முதல்வர் புகழாரம்



நாவலர் ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன்னரே சமயக் கல்வியை மையமாக வைத்து ஏனைய பாடங்களை அவற்றிற்குத் துணையாக்கித் தனது கல்வித் திட்டத்தை அமைத்திருந்தார். நல்லொழுக்கத்திற்கும், ஆன்ம ஈடேற்றத்திற்கும் வழி வகுப்பதே கல்வியின் முக்கிய நோக்கம் என்பதே நாவலர் பெருமானின் திட்ட வட்டமான முடிவாகவிருந்தது. இதனையே இன்றைய இலங்கை அரசாங்கமும் பலதையும் படித்த பின் வலியுறுத்துகின்றது. ஆகவே, நாவலர் ஒரு தீர்க்கதரிசி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதனால் தான் நாவலரை நாங்கள் மீண்டும் மீண்டும் நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியமிருக்கின்றது எனத் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன். 

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பது ஆண்டு நிறைவையொட்டி ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வு நல்லூர் ஸ்ரீ துர்க்கா மணிமண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(18) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகிய போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

எமது சமயம் மிகவும் நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த காலகட்டத்தில் அனைத்து வகையான நெருக்கடிகளையும் தனியொருவராகவும், இன்னும் குறிப்பிட்ட சிலருடனும் இணைந்து கொண்டு நாவலர் முறியடித்தார். அத்துடன் சமய சடங்குகள், இன்னோரன்ன நிகழ்வுகள் பல தடங்கலின்றி நடைபெறுவதற்கும் அன்றே வழிவகுத்து வெற்றியும் கண்டார். 

ஆலய நித்திய, நைமித்திய பூஜை பாராயணங்கள் நன்றாக நடைபெறாவிட்டால் அல்லது கட்டடங்கள் வேத விதிமுறைகளுக்கு ஒப்பனைவையாக அமையா விட்டால் அவை தொடர்பில் கடுமையாக விமர்சித்ததுடன் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபடுவாராம் நாவலர். இதனால் கோவில் நிர்வாகத்தினர்களும் வேறு பலரும் நாவலர் பற்றித் தவறான கருத்துக்களைப் பரப்ப முயற்சித்தனர். ஆனால், அவர் பற்றி அறிந்தவர்கள் அவரைப் போற்றினார்கள். 

ஒருமுறை சாட்சியமளிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்திற்குச் சென்ற போது நீதிபதி தமிழ்மொழியில் ஒரு சொல்லைத் தானும் அறியாதவராகவிருந்தும் நாவலர் பேசிய பாங்கைப் பார்த்து மிகவும் பாராட்டினாராம். அவரது தோற்றத்தையும், வருகையையும் கண்ட அப்புக்காத்துமார்கள், ஆங்கிலேயர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த, நீதிபதியும் சற்றே எழுந்தவர் போலக் காட்டிக் கொண்டாராம்.  

பிரம்மச்சாரியான அவரது ஒளிவட்டத்தின் சக்தி தான் இவ்வாறான புகழை அவர் பெறுவதற்கான காரணமென்றும் கூறலாம். 

நாவலரிடம் கொலை, கொள்ளை, வஞ்சனை, களவு, காமம் போன்ற வஞ்சனை போன்ற குற்ற உணர்வுகள் எள்ளளவுமில்லாத போதும் கோப குணம் மாத்திரம் மிகையாகவிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தனக்குத் தீங்கு செய்பவர்கள் மீது கோபம் கொண்டதை எக்காலத்திலும் எவரும் கண்டதில்லை. மாறாக அவர் சிவநிந்தை போன்ற விடயங்களுக்காவே கோபம் கொண்டார். அவரது கோபத்திற்குக் குருமார்கள், பிராமணர்கள், பிரபுக்கள், சுற்றத்தார் ஆகியோரும் ஆளாகத் தவறவில்லை. அவரின் கோபத்தை நற்கோபம் என அறிந்து கொண்டமையாலும், எந்தளவிற்குக் கோபம் உண்டோ அந்தளவிற்குப் பன்மடங்கு இரக்கமும் அவரிடமிருந்த காரணத்தால் அவரது கோபம் பலராலும் பொறுத்துக் கொள்ளப்பட்டது. 

தமிழன் என்றொரு இனமுண்டு.தனியே அவர்க்கோர் குணமுண்டு எனும் வகையில் மற்றவர்கள் பார்த்து வியக்குமளவிற்கு நாவலர் வாழ்ந்து காட்டினார். எளிய வாழ்க்கை முறைக்கு அவர் உதாரணமாக விளங்கினார். ஆறுமுகநாவலர் பெருமானின் பெருமைகளையும், சிறப்புக்களையும் பற்றி நான்கு நாட்கள் தொடர்ச்சியாகக் கலை நிகழ்வுகளுடன் கூடிய மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.  இந்த மாநாட்டின் ஆரம்ப நாளான இன்றைய தினம் உரையாற்றக் கிடைத்தமைக்கும், குருபூஜை நிகழ்வில் கலந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பிற்கும் இந்து கலாசார அமைச்சர் கெளரவ டி.எம்.சுவாமிநாதனுக்கும்,பணிப்பாளருக்கும், அமைச்சுச் சார்ந்த ஏனைய அதிகாரிகளிற்கும், இந்த நிகழ்வைத் திறம்பட ஏற்பாடு செய்து நடாத்தும் அனைவரிற்கும் மனமார்ந்த நன்றிகள் எனவும் தெரிவித்தார். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment