தமிழகத்தின் புகழ் பூத்த சென்னை பாரதியார் சங்கமும், யாழ்ப்பாணம் பாரதி மன்றமும் இணைந்து மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 135 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடாத்திய 'பாரதியார் விழா' இன்று ஞாயிற்றுக்கிழமை(28) காலை முதல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இதன் போது விழா மண்டபத்தில் கூடியிருந்த அனைவருக்கும் மகாகவி பாரதியார் உருவ முகமூடிகள் வழங்கப்பட்டன. அவை வீடு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்டிருக்கலாம் எனப் பலரும் எண்ணியிருந்த வேளையில் விழாவின் இடைநடுவில் திடீரென விழாவில் கலந்து கொண்டிருந்த அனைவரும் பாரதியாரின் முகமூடியை அணிந்து பாரதியாருக்கு சிறப்புச் சேர்க்க வேண்டுமென விழா ஏற்பாட்டாளர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதற்கமைய விழாவிற்குத் தலைமை தாங்கிய சென்னை பாரதியார் சங்கத் தலைவர் முதுநிலை வழக்கறிஞர் இரா.காந்தி, பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மேல் மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் , சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன் உள்ளிட்ட மேடையில் வீற்றிருந்த பிரமுகர்கள், விழாவில் கலந்து கொண்டிருந்த தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சான்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஒரே தடவையில் எழுந்து நின்று மகாகவி பாரதியாரின் வேடமணிந்து மகாகவி பாரதியாருக்கு மரியாதை செலுத்தினர்.
குறித்த கண்கொள்ளாக் காட்சியால் நீண்ட நாட்களுக்குப் பின் யாழ்.வீரசிங்கம் மண்டபமே பரவசத்தில் மூழ்கியது.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment