//]]>

Sunday, November 27, 2016

சிறிலங்கா அரசு தமிழின அழிப்புத் திட்டத்தை ஒரு போதும் கைவிடப் போவதில்லை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் சீற்றம்


தேசியம், தாயகம், சுயநிர்ணயம் எனும் அடிப்படை நிலைப்பாடுகளை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளும்வரை தமிழின அழிப்புத் திட்டத்தைச் சிங்களம் கைவிடப்போவதில்லை. இந்நிலையில் எத்தகைய அரசியல் தீர்வும் தமிழ் மக்கள் கௌரவமாகவும், சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் இனஅழிப்புக்கு உட்படாமலும், தமது அரசியல் முடிவுகளைத் தமக்காகத் தாமே எடுக்கும் ஏற்பாடுகளைக் கொண்டதாகவும் அமைய வேண்டும் என்பதை நாம் இவ்விடத்தில் மீளவும் வலியுறுத்த விரும்புகிறோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். 
மாவீரர் நாளை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை(27) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,  
நமது தலைவர்கள் தமது இயலாமை காரணமாகவோ அல்லது அறியாமை காரணமாகவோ அல்லது தம்மை யதாநாம் இன்று வரலாற்று முக்கியத்துவம் மிக்கதொரு காலகட்டத்தில் நிற்கிறோம். மாவீரர்களின் கனவு சுமந்து சுதந்திர வாழ்வுக்காகத் தொடர்ந்து போராடுவதா அல்லது சிங்களப் பேரினவாதத்தின் மேலாண்மையினை ஏற்று அடிமை வாழ்வில் சிறுமைப்பட்டுப் போவதா என்பதை தமிழ் மக்கள் முடிவு செய்ய வேண்டிய காலகட்டம் இது. நல்லாட்சி என்ற பெயரிலும் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதான அரசியல்தீர்வு என்ற போர்வையிலும் மாயமான்கள் எம் முன்னால் உலவி வரும் காலம் இது. வெளித்தோற்றத்தில் காட்டப்படும் மினுமினுப்பையும், பளபளப்பையும் கண்டு ஏமாறாது. தமிழீழ மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது  
நமது தலைவர்கள் தமது இயலாமை காரணமாகவோ அல்லது அறியாமை காரணமாகவோ அல்லது தம்மை யதார்த்தவாதிகள் என்று கருதிக் கொள்ளும் நிலை காரணமாகவோ அல்லது சொந்தநலன்கள் காரணமாகவோ இந்த மாயமான்களை தமிழ்மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சியினைத் தொடர்ந்தும் மேற்கொள்ளாத வகையில் தமிழ் மக்கள் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். நமது மாவீரர்களின் பெயரால் நாம் அதனைச் செய்துதான் ஆக வேண்டும்.
தற்போதைய ஆட்சியாளர்கள் தமது ஆட்சியினை நல்லாட்சி என அழைத்துக் கொள்கின்றனர். முன்னைய குடும்ப ஆட்சியின் அதிகார மையத்தை ஆட்டம் காணச் செய்தமையின் மூலம் ஆட்சிமாற்றம் சிங்கள மக்களுக்குச் சில நன்மைகளை வழங்கியிருக்கக்கூடும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்த ஆட்சியினை நல்லாட்சி என எவ்வாறு உணர முடியும்? தமிழ்மக்களுக்கு எதிரான இனஅழிப்பைப் புரிந்தவர்களும், இனவழிப்புக் குற்றவாளிகளும் நிறைந்தவொரு ஆட்சியே இது. தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப்படையினரைத் தமிழர் தாயகபூமியில் இருந்து அகற்ற மறுக்கும் ஆட்சியே இது. அரசியற் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகளை விடுதலை செய்வதற்கு எவ்வித தயவுதாட்சணியமுமின்றி மறுத்துக்கொண்டிருக்கும் ஆட்சியே இது.
இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதாகக் கூறிய தமிழர் காணிகளை முழுமையாக விடுவிக்காது இழுத்தடிக்கும் ஆட்சியே இது. பல்கலைக்கழக மாணவர்களை வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லும் ஆட்சியே இது.
இனவெறுப்பினை உமிழும் புத்தபிக்குகள் சட்டநடவடிக்கை எதுவுமின்றி சுதந்திரமாக உலவ இடம் தரும் ஆட்சியே இது. இத்தகைய ஆட்சியை எவ்வாறு நாம் நல்லாட்சியெனக்கொள்ள முடியும்?
முன்னைய மகிந்த இராஜபக்ச ஆட்சியின் கொடூரம் காரணமாகவே தமிழ் மக்கள் ஆட்சிமாற்றத்துக்கு ஆதரவு வழங்கினர். ஆனால் இப்புதிய ஆட்சியினை நல்லாட்சி என அங்கீகரிப்பதற்குத் தமிழ் மக்கள் தயாராக இல்லையென்பதே உண்மை.
இந்த ஆட்சியாளர்கள் மட்டுமல்ல சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிடியில் சிக்குண்டு இறுகிப் போய் இருக்கும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் எவராலும் தமிழ் மக்களுக்கு நல்லாட்சியினை வழங்க முடியாது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழ் இனத்தை ஒரு தேசமாக அங்கீகரித்து, இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களை தமிழர் தாயகப் பகுதியாக ஏற்றுக்கொண்டு, தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழத் தனியரசு உட்பட தீர்வு வடிவங்களை உள்ளடக்கிய மக்கள் வாக்கெடுப்பினைத் தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் நடத்தி தேசியப்பிரச்சனைக்கு தீர்வு காண எந்த ஆட்சி முன்வருகிறதோ அந்த ஆட்சி மட்டுமே நல்லாட்சியாக இருக்க முடியும்.
இவ்வகையான மேம்பட்ட சிந்தனைக்குச் சிறிலங்காவின் எந்த ஆட்சியாளரும் தயாராக இல்லை. தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் பேசி ஒற்றையாட்சி ஆட்சிமுறையை சமஸ்டி போலக் காட்டும் வகையிலான ஓர் அரசியலமைப்பின் மூலம் தேசியப்பிரச்சினைக்குத் 'தீர்வு' காணும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தின்படி வடக்கு கிழக்கு இணைக்கப்படப் போவதில்லை. மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரங்களில் சில மாகாணங்களுக்குக் கிள்ளித் தெளிக்கப்படவுள்ளன. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் கிஞ்சித்தேனும் எட்ட முடியாத ஒரு திட்டமாகத்தான் புதிய திட்டம் அமையப்போகிறது.
தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட வகையில் வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்பதே கூட்டமைப்பினர் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதி. இந்த வாக்குறுதிக்கு மாறான எந்தத் தீர்வு வடிவம் குறித்தும் அரச தலைவர்களுடன் கூட்டமைப்புத் தலைவர்கள் எவ்வகை அங்கீகாரத்தின் அடிப்படையில் பேச்சுக்கள் நடத்த முடியும்?
தமிழ் மக்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படை நிலைப்பாடுகளை சிறிலங்கா அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையெனவும், இதுவே யதார்த்தம் எனவும் இக் காரணங்களுக்காகக் கிடைப்பவற்றைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்கள் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கருதுபவர்களும் எம் மத்தியிலுள்ளனர்.
தமிழ் மக்கள் தாயகத்தில் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் எமக்கு முரண்பாடு எதுவும் கிடையாது. இதேவேளை தேசிய பிரச்சனைக்கான தீர்வு என்ற பெயரில் சிறிலங்கா அரசு முன்வைக்கவுள்ள அரைகுறைத் திட்டத்தை இனப்பிரச்சினைக்கான தீர்வாகத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே எமது நிலைப்பாடு.
வடக்கு – கிழக்குப் பகுதியில் வாழும் முஸ்லீம் மக்களுக்கும் இப்பகுதி தாயகப் பிரதேசமே. முஸ்லீம் மக்களுடன் எத்தகைய அரசியல் ஏற்பாடுகளுக்கு வருதல் என்பது குறித்து தமிழ் - முஸ்லீம் அரசியல் தலைவர்கள் தமக்குள் பேசி ஓர் உடன்பாட்டை எட்டிக் கொள்ள வேண்டும்.
அமைவிடக் கேந்திர முக்கியத்துவம் காரணமாக அனைத்துலக அரசுகளின் அக்கறைக்குரிய இடமாக இலங்கைத்தீவு இருந்து வருகிறது. தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் கேந்திர முக்கியத்துவமுள்ள மக்களாக இருக்கிறார்கள். இருந்தும் தமது நலன்கள் சார்பாக இக் கேந்திர முக்கியத்துவத்தைப் பயன்படுத்துவதில் தமிழ் மக்கள் இதுவரை வெற்றியடையவில்லை. இது ஏன் என்பது குறித்து நாம் மிக ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
மிக நீண்டகாலமாக அரசு அற்ற மக்களாக இருந்து விட்டமையால் இராஜதந்திரப் பாரம்பரியச் செழுமை குறைந்த மக்களாக நாம் இருந்தமையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இது குறித்து ஈழத்தமிழர் தேசம் கூடுதல் கவனம் கொடுத்தல் அவசியம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment