முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் சிம்பாப்வே அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்றையதினம் புலவாயோவில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை- சிம்பாப்வே அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆரம்பம் முதலே திணறி வந்த சிம்பாப்வே அணி 36.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.
சிம்பாப்வே அணி சார்பாக மசகண்டா 36 ஓட்டங்களும், சீன் வில்லியம்ஸ் 35 ஓட்டங்களும் கூடுதலாக பெற்ற அதேவேளை ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.
இலங்கை அணி சார்பில், வந்தர்சே, குணரத்ன தலா 3 , சச்சித் பத்திரன 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
unnamed
தொடர்ந்து 161 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கிய போதிலும் தனஞ்ஜெய டி சில்வா டக்- அவுட்டாகி ஏமாற்றினார். குஷால் பெரேராவும் (14), அடுத்து வந்த டிக்வெல்லவும் (16) நிலைக்கவில்லை.
இதனால் இலங்கை அணி நெருக்கடியான நிலையில் இருந்தது. இதன் பின்னர் ஜோடி சேர்ந்த குஷால் மெண்டிஸ், அணித்தலைவர் உபுல் தரங்க ஆகியோர் நிதானமாக ஆடி அணியை மீட்டனர்.
குஷால் மெண்டிஸ் 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய உபுல் தரங்கவும் அரைச்சதம் அடித்தார்.
இதனால் இலங்கை அணி 37.3 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது.
அணித்தலைவர் உபுல் தரங்க கடைசியில் விளாசிய ஒரு சிக்சருடன் 57 ஓட்டங்களுடனும், குணரத்ன 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சிம்பாப்வே அணி சார்பில், பிரைன் விட்டோரி 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இந்தப் போட்டியினதும், தொடரினதும் ஆட்டநாயகனாக குஷால் மெண்டிஸ் தெரிவானார்.
வழமையான அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸூம், தினேஸ் சந்திமாலும் காயம் காரணமாக இந்த தொடரில் கலந்து கொள்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment