கறுப்புப் பணத்துக்கு எதிராக பிரதமர் மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கையாக பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான மறுநாள் (நவம்பர் 9) இரவு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)வின் ஊழியர்கள் எட்டு பேர் ஒரு விபத்தில் பலியானார்கள். மறுநாள், வங்கிகளில் மக்கள் கூட்டத்தைச் சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளை முடித்துவிட்டு, இரவு தாமதமாக கிளம்பிய வங்கியின் கிளை மேலாளர், மூன்று அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் இதில் அடக்கம். அதேபோல, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வங்கி ஊழியர்களின் மரணம் தொடர்பாக செய்திகள் வந்தன. இது, இந்திய வங்கித்துறை சந்தித்துவரும் நெருக்கடிகளையும் துன்பங்களையும் காட்டுவதாக அமைந்தன. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் வங்கி ஊழியர்கள்மீது எந்த மாதிரியான நெருக்கடிகள் சுமத்தப்படுகின்றன? அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பது போன்ற கேள்விகளுக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் தாமஸ் பிரான்கோ பதிலளித்துள்ளார்.
வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கிறார்கள். பணம் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். ஒரு வங்கி அதிகாரியாக இந்தப் பிரச்னையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், ஒரு வங்கி அதிகாரி எப்படிச் செயல்பட வேண்டும்?
இந்தத் திட்டம் கறுப்புப் பணத்தை ஒழிக்குமா? இல்லையா? என்பது போன்ற விவாதங்களுக்குள் நான் போகப் போவதில்லை. ஆனால், இந்தத் திட்டம் முறையான திட்டமிடலோடு அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது உறுதி. இந்தத் திட்டத்தை 1969இல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதோடு ஒப்பிட்டுப் பாருங்கள். 18 ஜூலை 1969இல் மொரார்ஜி தேசாய் தனது துணை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகும்கூட தேசியமயமாக்கலை அவசரச் சட்டமாகக் கொண்டுவர ஒரு குழு தீவிரமாக உழைத்தது. மொரார்ஜி தேசாய் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே, இந்திரா காந்தி அவரை பதவி விலக வைத்தார். ஏன், இதைச் சொல்ல வருகிறேன் என்றால், இந்தத் திட்டமானது முறையான அரசியல் மற்றும் நிர்வாகத் திட்டமிடலோடு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், மோடி அமல்படுத்தியிருக்கும் இந்தத் திட்டத்திலோ, பல முக்கிய அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொள்ளாமலே அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பணத்தை தடை செய்வது குறித்த முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னரே, அதற்குத் தகுந்த புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் கிடைக்கும்வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய மக்களுக்கு தேவைப்படும் ரூ.500 நோட்டுகளைத்தான் முதலில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், நாட்டின் பல பகுதிகளிலும் இன்னும் ரூ.500 நோட்டுகள் விநியோகிக்கப்படவில்லை. மோடியின் அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னரே வங்கிகள் திறக்கப்பட்டாலும் மக்கள் பணத்தை மாற்றுவதற்கான விண்ணப்பப் படிவங்கள், கணினியின் மென்பொருள் செயலிகள் போன்றவைக்கூட முழுமையாக தயார் நிலையில் இல்லாமல் இருந்த நிலையில்தான் பொதுமக்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மிக முக்கியமாக, பல வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகளே சென்று சேரவில்லை. இந்த நெருக்கடியால் எங்களிடம் இருந்த ரூபாய் 100 நோட்டுகளை வைத்து எவ்வளவு பேரை சமாளிக்க முடியும்? மறுநாளிலிருந்து மக்கள் காலை 7 மணி முதலே வங்கிகளின் முன்னால் வரிசைகளில் காத்திருக்கத் தொடங்கினார்கள். மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. இதற்காக, இரவு 10 மணி வரை கூட வங்கிகள் செயல்பட்டு மக்களுக்குப் பணத்தை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தன.
அதுவரைக்குமான பணம் உங்களிடம் இருந்ததா?
அந்தக் கூத்தை ஏன் கேட்கிறீர்கள். தொடர்ந்து மக்களிடம் ரூபாய் 100 நோட்டுகளைக் கொடுத்து சமாளித்து வந்தோம். பின்னர், எங்களிடம் பணம் தீர்ந்த பிறகு ரிசர்வ் வங்கியை அணுகியபோது, அவர்கள் பழைய அழுக்கடைந்த ரூபாய் 100 நோட்டுகளைக் கொடுத்தார்கள். அந்த பழைய ரூபாய் நோட்டுகளை அடுக்குவதற்கும் எண்ணுவதற்கும் எந்திரங்களைப் பயன்படுத்த முடியாததால் நாங்கள் அதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது. மேலும் அந்த ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்மிலும் போட முடியாதபடி இருந்ததால்தான் ஏடிஎம்களிலும் கடுமையான பணத் தட்டுப்பாடு இருந்தது.
புதிய ரூபாய் நோட்டுகள் புழங்கும்படி ஏடிஎம் மெஷின்கள் மறு சீரமைக்கப்பட வேண்டியுள்ளதாக கூறப்படுகிறதே!
ஆம். புதிய ரூபாய் நோட்டுகள் தற்போதுள்ள ஏடிஎம்களில் பொருந்தாது. அவற்றுக்கான மறுசீரமைப்புப் பணிகள் மோடி அறிவிப்பு வெளியிட்ட ஒரு வாரத்திலேயே தொடங்கிவிட்டன. அதில் சோகம் என்னவென்றால், புதிய ரூபாய் நோட்டுகள் வருவதற்கு முன்பே நாங்கள் அந்தப் பணிகளை செய்யத் தொடங்கியிருந்தோம்.
பெரும்பாலான ஏடிஎம்களில் ரூபாய் 100 நோட்டுகளாகவே ரூ.2.1 லட்சம் வரை பணம் நிரப்ப முடியும். ஒரு நபர் ரூபாய் 2,000 எடுக்கலாம் என்ற அரசாங்க அறிவிப்பின்படி, அந்த ரூ.2.1 லட்சம் பணத்தை 105 பேர் மட்டுமே எடுக்க முடியும். ஆனால் ஒவ்வொரு ஏடிஎம் முன்பாகவும் 300 பேருக்கு குறையாமல் நிற்கிறார்கள்.
இதுதொடர்பாக, கிராமப்புறங்களில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள் என்ன சொல்கிறார்கள்?
கிராமப்புறங்களில் பணிபுரியும் எனது சகாக்களிடம் இதுபற்றி விசாரித்தபோது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத சட்டத்தின்மூலம் பயன்பெறும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் போன்றோர் இந்த திடீர் நடவடிக்கையால் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். ஆனாலும் இந்த நெருக்கடியான சூழலைச் சமாளிக்கும் நோக்கில் வங்கி ஊழியர்கள் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். கடந்த 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் கிட்டத்தட்ட இரவு முழுக்க பணியாற்றியிருக்கிறார்கள்.
பிரச்னை இவ்வளவு தீவிரமாக வெடித்து மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வரும்நிலையில், வர்த்தகம் தொடர்பாக எழுதக்கூடிய நிருபர்கள் இந்த வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்று கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
இதை முதல் நாளிலே அறிவித்திருந்தால் மக்களுக்கு சிறிதேனும் உதவிகரமாக இருந்திருக்கும். எனக்கு இந்தத் திட்டத்தில் உடன்பாடு இல்லாதபோதும் வணிக நிருபர்களின் கருத்து தொடர்பான அறிவிப்பு நல்ல நகர்வாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். ஆனாலும், ஒரு சில இடங்களில் வங்கிக்கணக்கு தொடங்கவும் பணத்தை மாற்றவும் வணிக நிருபர்கள் கமிஷன் வாங்குவதாக புகார்கள் வருகின்றன. மேலும் வங்கிக்குச் சொந்தமான பணத்துடன் அவர்கள் தலைமறைவாகி விடுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
வங்கிகளுக்கு இதனால் என்ன மாதிரியான இழப்பு ஏற்பட்டிருக்கிறது?
வங்கிகளின் அனைத்து வழக்கமான செயல்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. முழுக் கவனமும் ரூபாய் நோட்டு மாற்றத்திலேயே உள்ளது. மற்ற அனைத்துச் செயல்பாடுகளும் ஸ்தம்பித்துள்ளன. இதன் மூலம் வங்கிக்கு எந்தவிதமான சிறப்பு வருவாயும் கிடைக்கப் போவதில்லை. வங்கியின் முக்கிய வருவாயாகிய கடன், வட்டி போன்றவை முற்றிலும் தடைபட்டுள்ளன.
(http://www.frontline.in/cover-story/banks-have-suspended-all-normal-operations/article9373764.ece?homepage=true)
நேர்காணல்: வி.ஸ்ரீதர்
நன்றி: frontline
தமிழில்: பீட்டர் ரெமிஜியஸ்
0 comments:
Post a Comment