யாழ். மாவட்டக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், மறைந்த ஊழியர்களின் நினைவு கூரலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை(07) முற்பகல்-10 மணி முதல் யாழ். திருநெல்வேலியிலுள்ள நல்லூர் கால்நடை வைத்திய அலுவலகத்தில் நடைபெற்றது.
ஊழியர் நலன்புரிச் சங்கத் தலைவரும், உடுவில் கால்நடை வைத்திய அதிகாரியுமான வைத்தியகலாநிதி சி. க. விமலகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்டக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி- வத்சலா அமிர்தலிங்கம் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் திணைக்கள ஊழியர்களாகச் சேவையாற்றி வரும் போது கடந்த வருடம் அகால மரணமடைந்த ஊழியர்களான கிருஷ்ணமூர்த்தி லவகஜன் மற்றும் இராசையா பத்மநாதன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக மெழுகு திரியேற்றி மெளன அஞ்சலிப் பிரார்த்தனை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்திலுள்ள 15 வறுமைக் கோட்டுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்குத் தலா இரண்டாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து தனித் திறமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச செயலகங்களுக்கும் உட்பட்ட கால்நடை வைத்திய அதிகாரிகள், கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, யாழ். மாவட்டக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் ஊழியர் நலன்புரிச் சங்க நிர்வாகம் தனது அங்கத்தவர்களிடம் சேகரித்த நிதியில் வருடாவருடம் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவ, மாணவிகளின் கற்றலுக்கு உதவி வருகின்றமை பலருக்கும் முன்னுதாரணமாகவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment