//]]>

Sunday, April 16, 2017

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மாணவர்கள், பொது வாசகர்கள் மத்தியில் கட்டுரைப் போட்டிகள்


வருடாந்தம் ஏப்ரல் மாதம்-23 ஆம் திகதி கொண்டாடப்படும்  உலக புத்தக தினத்தை முன்னிட்டு யாழ்.குடாநாட்டை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் அறிதூண்டல் மையம் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுவாசகர்கள் மத்தியில் கட்டுரைப் போட்டியொன்றை நடாத்தத் தீர்மானித்துள்ளது. வாசிப்புப் பண்பாட்டையும், நூலகப் பயன்பாட்டையும் மேம்படுத்தும் நோக்கில் குறித்த போட்டிகள் நடாத்தப்படவுள்ளன. 

பாடசாலை மாணவர்களுக்கு நான்கு பிரிவுகளாக இடம்பெறும் போட்டிகளில் ஆரம்பப் பிரிவு-1 இல் தரம்-06 மற்றும் தரம்-07 மாணவர்கள் 'அறிவு வளர்ச்சிக்கு நூல்களை வாசிப்பதன் அவசியம்', 'எனது வாசிப்பு வழிகாட்டிகள்' ஆகிய இரண்டு தலைப்புக்களில் ஏதாவது ஒரு தலைப்பைத் தெரிவு செய்து 200 இலிருந்து 250 வரையான சொற்களிலும், ஆரம்பப் பிரிவு-2 இல் தரம்-08 மற்றும் தரம்-09 மாணவர்கள் 'பூவுலகை வெற்றி கொள்ளத் தகவல் உலகை உபயோகிப்போம்', 'அறிவுச் சுரங்கம் நூலகம்: அதனுள் ஆழ்ந்து பெறுவோம் நல்முத்துக்கள்'  ஆகிய தலைப்புக்களில் ஏதாவது ஒரு தலைப்பைத் தெரிவு செய்து 300 இலிருந்து 350 வரையான சொற்களிலும், மத்திய பிரிவில் தரம்-10 மற்றும் தரம்-11 மாணவர்கள் 'வாசிப்புப் பண்பாட்டு அபிவிருத்தியை நாடும் இலங்கைத் தமிழ்ச் சமூகம்',  'மாணவப் பருவ இலக்கிய முயற்சிகளுக்கு கல்வி நிறுவனச் சஞ்சிகைகளின் பங்களிப்பு: ஒரு பிரதேசத்தை முன்னிலைப்படுத்திய அறிமுகம்' ஆகிய தலைப்புக்களில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து 400 முதல் 500 வரையான சொற்களிலும், மேற்பிரிவில் தரம்-12,13 மாணவர்கள் 'தகவலும் தேசிய அபிவிருத்தியும்', 'ஈழத்துத் தமிழ்ச் சூழலில் மரபார்ந்த அறிவுச் செல்வங்களை அழியவிடாது பாதுகாக்கும் ஆவணப்படுத்தலின் அவசியம்' போன்ற தலைப்புக்களில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து 600 முதல் 700 வரையான சொற்களிலும் கட்டுரை எழுதுதல் வேண்டும். 

திறந்த போட்டி பாடசாலை மாணவர் தவிர்ந்த பொதுவாசகர் மட்டத்தில் நடாத்தப்படும். இந்தப் போட்டிக்கு வயதுக் கட்டுப்பாடில்லை. இந்தப் போட்டியில் 'வீட்டு நூலகங்களின் விருத்தியூடாக வாசிப்புப் பண்பாட்டை வளர்த்தல்', 'இளையோரிடத்தே வாசிப்புப் பண்பாடு அன்றும் இன்றும்- ஒரு ஒப்பீடு ஆகிய தலைப்புக்களில் ஏதேனுமொன்றைத் தெரிவு செய்து 900 முதல் 1000 வரையான சொற்களில் கட்டுரை எழுத வேண்டும். 

பாடசாலை மாணவர்கள் தமக்குத் தரப்பட்டுள்ள சொற்கட்டுப்பாட்டுக்கமைய கட்டுரையை எழுதித் தமது பாடசாலை அதிபர் மூலம் கட்டுரையாளரின் பெயர், கற்கும் தரம், சொந்த ஆக்கம் என்ற உறுதியுரை, தொடர்பு கொள்வதற்கு வசதியாகத் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களைத் தனித்தாளில் இணைத்து அனுப்புதல் வேண்டும். 

பொதுவாசகர்கள் தமது பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டுரைத் தலைப்புக்களில் ஏதேனும் விரும்பிய தலைப்பில் கட்டுரையை எழுதி தமது பகுதிக் கிராம அலுவலர் அல்லது சமாதான நீதவான் மூலம் சொந்த ஆக்கம் என்பதனை உறுதிப்படுத்தி, தொடர்பு கொள்வதற்கு வசதியாக சொந்தத் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரியைத் தனித்த தாளில் எழுதி அனுப்புதல் வேண்டும். 

மாணவர்கள் மற்றும் பொதுவாசகர்கள் மத்தியில் நடாத்தப்படும் குறித்த கட்டுரைப் போட்டிக்கான இறுதித் திகதி எதிர்வரும் ஏப்ரல் மாதம்- 31 ஆம் திகதியாகும்.  போட்டியாளர்கள் 'அறிதூண்டல் மையம்', 11/21, வட்டுவினி அம்மன் கோவிலடி, இணுவில் மேற்கு இணுவில் எனும் முகவரிக்குத் தமது ஆக்கங்களை அனுப்புதல் வேண்டும். 

இந்தப் போட்டிக்காக அனுப்பப்படும் கட்டுரைகளுள் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் கட்டுரையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதமளவில் பெறுமதியான புத்தகப் பரிசில்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment