யாழ். பல்கலைக்கழகத் தமிழ்-சிங்கள-மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் தமிழ்- சிங்கள இருதரப்பு மாணவர்களும் தாம் தற்போது பகைமையை மறந்து சமாதானமாக இருப்பதாகத் தெரிவித்ததுடன் தமது முறைப்பாட்டை மீளப் பெற்றுள்ளனர். இதன் பிரகாரம் இந்த வழக்கு விசாரணை முடிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் தமிழ்- சிங்கள இருதரப்பு மாணவர்களும் தாம் தற்போது பகைமையை மறந்து சமாதானமாக இருப்பதாகத் தெரிவித்ததுடன் தமது முறைப்பாட்டை மீளப் பெற்றுள்ளனர். இதன் பிரகாரம் இந்த வழக்கு விசாரணை முடிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம்-16 ஆம் திகதி யாழ்.பல்கலைகழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்பதற்கான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் வழமைக்கு மாறாக வரவேற்பு நடனத்தில் வழமையாக இடம்பெறும் தமிழ்ப் பாரம்பரிய நடனத்தைத் தவிர்த்துச் சிங்கள முறையிலான கண்டிய நடனத்தை நடாத்த சிங்கள மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடு இறுதியில் தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதலாக மாறியது.இந்த மோதல் சம்பவத்தில் சிங்கள மாணவனொருவர் காயமடைந்து கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.காயமடைந்த மாணவனது முறைப்பாட்டுக்கு அமைய தமிழ் மாணவர்கள் சிலருக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோன்று தமிழ் மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய சிங்கள மாணவர்களுக்கு எதிராகவும் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இரு வழக்கு விசாரணைகளும் கடந்த நான்கு மாதங்களாக யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
இதன்படி, கடந்த இரண்டாம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் இருதரப்பு மாணவர்களும் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஊடாக தாம் தற்போது ஒற்றுமையாக இருப்பதாகக் குறிப்பிட்டனர். எனவே, இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
யாழ். நீதவான் குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த நபர் தனது முறைப்பாட்டை மீளப் பெறுவதாகப் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்து, இது தொடர்பாகக் குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் மன்றுக்குத் தெரியப்படுத்தப்பட்டால் குறித்த வழக்கை முடிவுக்கு கொண்டுவரலாம் எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். சதீஸ்தரன் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. மாணவர்கள் சார்பில் சட்டத்தரணி சயந்தன் முன்னிலையாகியிருந்தார்.
கோப்பாய்ப் பொலிஸார் குறித்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பு மாணவர்களும் தாம் செய்திருந்த முறைப்பாட்டை மீளப் பெற்றுள்ளதாக மேலதிக அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment