சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் ஒவ்வாரு அறையாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையால் ஊழியர்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.
உடல் நலக்குறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நாளில் இருந்தே ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்திகள் அவ்வப்போது எழுந்தது. இதனால், மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில் ஆவேசமும், பதற்றம் நிறைந்து காணப்பட்டது.
இதனிடையே, 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் கடந்த 5-ம் தேதி இரவு ஜெயலலிதா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அறிவித்தது. இந்த அறிவிப்பால் ஆவேசம் அடைந்த தொண்டர்கள், அப்போலோ மருத்துவமனை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஜெயலலிதாவின் மரணத்தை ஜீரணிக்க முடியாத தொண்டர்கள் இன்னும் கவலையில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனைக்கு இன்று பிற்பகலில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து, ஆயிரம்விளக்கு காவல்துறைக்கு, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக அனைத்து மாடியிலும் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் இடையே தேவையில்லாத பதற்றத்தை தணிக்க இந்த நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகம் எடுத்துள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து ஒவ்வாெரு மாடியிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு பீதியால் ஊழியர்கள் அதிர்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
0 comments:
Post a Comment