இணையத்தளங்களாலும், சமூக வலைத்தளங்களாலும் நாளாந்தம் நிந்திக்கப்படும் பிரதான நபராக நானிருக்கின்றேன் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிழையான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களுக்கு எதிராகப் புதிய சட்ட திட்டங்கள் உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
நீதிமன்றச் சேவைச் சங்கத்தினர் ஏற்பாடு செய்த நீதிபதிகளின் வருடாந்த மாநாடு கொழும்பை அண்மித்துள்ள புறநகர்ப் பகுதியான ஜாஹெலவிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் இன்று திங்கட்கிழமை(19) இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இணையத்தளங்களால் அதிகமாக விமர்சிக்கப்படுபவன் நான் தான். இதனால் என்னை மோசமாகச் சாடும் இணையத்தளங்களைப் பார்க்க வேண்டாம் என எனது பாரியாரிடமும், பிள்ளைகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளேன்.
எனினும், இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். இன்றுள்ள சுதந்திரமான சூழலை இணையத்தளங்கள் தவறான வகையில் அப்பட்டமாக மீறி வருகின்றன.
விமர்சனங்கள், பழிச்சொற்கள் என்பன அரசியல்வாதிகளுக்குப் பழகிப்போன விடயங்கள். ஆனால் இன்று நீதிபதிகள் உட்பட நீதித்துறையினரை இலக்கு வைத்துப் பாரிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவை அவர்களின் சுயாதீனத் தன்மைக்கும், கௌரவத்திற்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளன.
இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து அரசாங்கம் கவலைப்படுகின்றது.
எவ்வாறாயினும் அடிப்படையற்ற பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு ஒருவரின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம் என்றார்.
0 comments:
Post a Comment