//]]>

Friday, April 14, 2017

போரை சந்திக்கத் தயார் : அதிபர் கிம்


வடகொரியா மீது தொடுக்கப்படும் நேரிடையான எந்தப் போரையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று, அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

கிழக்காசியாவின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள வடகொரியா, தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கினாலும், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்து அணு ஆயுதச் சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. 

இதுவரை தொடர்ந்து 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தியுள்ளது. அணுகுண்டைவிட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டையும் வெடித்து, இதுவரை ஐந்து முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தியுள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.
இதனால், வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. 

ஆனாலும் வடகொரியா அதை தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி உலக நாடுகளை தன்பக்கம் ஈர்க்கும்வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கொரியாவில் இருந்து வடகொரியா என்ற தனிநாட்டை பிரித்து உருவாக்கிய மறைந்த முன்னாள் அதிபர் கிம் யோ சங்-கின் 105வது பிறந்த நாள் விழாவையொட்டி, வடகொரியா தலைநகரான பியாங்யாங் நகரில் இன்று ஏப்ரல் 15ஆம் தேதி மாபெரும் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. 

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், சக்திவாய்ந்த போர் ஆயுதங்கள், ராணுவ டாங்கிகள் மற்றும் அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் அதிநவீன ஏவுகணைகள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்த பிரமாண்ட அணிவகுப்பு அந்நாட்டு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகியது.

வடகொரியாவின் இரண்டாம் நிலை தலைமை அதிகாரியும், ஆளும்கட்சித் தலைவரும், ராணுவத் தளபதியுமான சோய் ரியாங்-ஹே இந்த அணிவகுப்பை தொடங்கிவைத்துப் பேசியபோது கூறுகையில், ‘வடகொரியா மீது தொடுக்கப்படும் நேரிடையான எந்தப் போரையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள்மீது நடத்தப்படும் அணு ஆயுதத் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுப்போம்’ என்று கூறினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment