யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தொல்லியல் ஆய்வு வட்டத்தின் ஏற்பாட்டில் மன்னார் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்களின் கண்காட்சியும், தேடல் சஞ்சிகையின் வெளியீட்டு விழாவும் நேற்று வியாழக்கிழமை(29) காலை யாழ்.பல்கலைக் கழகத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
காலை-09.30 மணியளவில் பல்கலைக் கழகத் தொல்லியல் அருட்காட்சியகத்தில் கண்காட்சி யாழ் யாழ்.பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியை செல்வி- வசந்தி அரசரட்ணத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கைலாசபதி கலையரங்கத்தில் தொல்லியல் ஆய்வு வட்டத் தலைவர் பொ. வருண்ராஜ் தலைமையில் தேடல் இதழ்-02 சஞ்சிகை
வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக் கழகத் துணைவேந்தர், பல்கலைக் கழகக் கலைப்பீடப் பதில் பீடாதிபதி கலாநிதி- க.சுதாகர், பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் செ.கிருஸ்ணராஜா, பல்கலைக் கழகத் தொல்லியல் பாட இணைப்பாளரும், சிரேஷ்ட பேராசிரியருமான ப. புஷ்பரட்ணம் ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றினர்.
குறித்த நூலை யாழ்.பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணம் வெளியிட்டு வைக்க முதற்பிரதியை யாழ்.பல்கலைக் கழக வரலாற்றுத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி- சாந்தினி அருளானந்தம் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து 'கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட் ட இந்துமதத்தின் தொன்மைச் சான்றுகள்' நாட்காட்டி வெளீயீடு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நூலின் சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நூல் அறிமுகவுரையை பல்கலைக் கழகத்தின் கிறிஸ்தவ நாகரீகத் துறைத் தலைவர் பேராசிரியர் வண.ஞா.பிலேந்திரன் ஆற்றினார். பல்கலைக் கழகப் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் செ-ரவீந்திரன் நூல் மதீப்பீட்டுரையை ஆற்றினார். ஏற்புரையைப் பதிப்பாசிரியர் செல்வி பு.நிரோஷிகா நிகழ்த்தினார்.
குறித்த நூலில் "தமிழரின் கல்விப் பாரம்பரியத்தில் ஆய்வும் ஆய்வுக்குரிய பிரச்சினைகளையும் அடையாளம் காணுதல்" எனும் தலைப்பில் சிரேஷ்ட பேராசிரியர் க.கந்தசுவாமி எழுதிய கட்டுரையும் மற்றும் தொல்லியல் துறை மாணவ, மாணவிகள் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம்,யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுக்குட்படுத்தி எழுதிய கட்டுரைகளும் உள்ளடங்கியுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தொல்லியல் ஆய்வு வட்டத்தால் இரண்டாவது இதழாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட கலாசார மத்திய நிலையத்தின் திட்ட முகாமையாளர் லக்ஸ்மன் சந்தான மைத்திரிபால, தொல்லியல் திணைக்களத்தின் யாழ்.கிளிநொச்சி உதவிப் பணிப்பாளர் பாலித வீரசிங்க உட்பட யாழ்.பல்கலைக் கழக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, நேற்று ஆரம்பமான கண்காட்சியில் கடந்த-2006 ஆம் ஆண்டு மன்னார் கட்டுக்கரைக் குளக் கரையில் யாழ்.பல்கலைக் கழகத் தொல்லியல் துறை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பல்வேறு தொன்மை வாய்ந்த பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்து மதத்தின் தொன்மைச் சான்றுகள், புராதான காலத்தில் பயன்படுத்தப்பட்ட சுடுமண் நாணயங்கள்,ஆதி கால, இடைக்கால நாணயங்கள், பெரிய குளத்தில் 13 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு, பெண் தெய்வங்களின் உருவங்கள், சுடுமண் மனித உருவங்கள் பெருங்ககற்காலக் கருவிகள், அகத்தியர் கதையை நினைவுபடுத்தும் சிறிய கலசங்கள், சுடுமண்ணாலான மயில் சின்னத்தின் பாகங்கள், பல்வேறு அளவுகளில் அமைந்த சுடுமண் அகல் விளக்குகள்,தீபங்கள் உள்ளிட்ட புராதன தொல்லியல் சான்றுப் பொருட்கள் ஆச்சரியமூட்டும் வகையிலும், தமிழர்களது தொன்மையான வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையிலும் அமைந்துள்ளன.
இந்தக் கண்காட்சியை நேற்றுக் காலை முதல் மாலை வரை பல்கலைக் கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
0 comments:
Post a Comment