//]]>

Friday, December 23, 2016

வடக்கு கல்வியமைச்சரின் குள்ளத்தனமான செயற்பாட்டை கண்டிக்கின்றோம்: இலங்கை ஆசிரியர் சங்கம்


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வழிகாட்டலில் தரம்பெற்ற புதிய அதிபர்களின் பல போராட்டங்களிற்குப் பின்னர் மத்திய கல்வியமைச்சின் அமைச்சரவைத் தீர்மானத்துக்கமைய  நேர்மையாக நடைபெறவிருந்த வடமாகாண புதிய தரம்பெற்ற அதிபர் நியமனத்தை தனது வரட்டு செயற்பாடுகளால்  தகுதியற்ற கடமைநிறைவேற்று அதிபர்களைத் தொடர்ந்தும்  பாதுகாக்க மேற்கொண்டுவரும் வடமாகாணக் கல்வியமைச்சரின் குள்ளத்தனமான செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் பரீட்சையில் சித்தியடையாத கடமை நிறைவேற்று அதிபர்களைப் பாதுகாக்க வடமாகாண சபையில் ஆர்ப்பாட்டத்தைச் செய்யுமாறு தூண்டிய கல்வியமைச்சரின் செயலையும் வன்மையாகக் கண்டித்துள்ளது. 

இது தொடர்பாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலினின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

எமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்  வியாழக்கிழமை (22) கடமைநிறைவேற்று அதிபர்களை  வடமாகாண சபை அமர்வில் கல்வி விவாதம் நடைபெற முன்பு ஆர்ப்பாட்டம் செய்யுமாறு தூண்டி  அவர்கள் போராட்டம் செய்வது போன்ற தோற்றத்தை உருவாக்கி அவர்களைத் தொடர்ந்தும் பாதுகாக்க முனைந்தமை  தனது அரசியல் சுயநலத்துக்காக வடமாகாணக் கல்வியை தரம் தாழ்த்தச் செய்யும் மோசமான செயற்பாடாகும்.கடமைநிறைவேற்று அதிபர்கள்  முறையாக அதிபரொருவர் குறித்த பாடசாலைக்கு நியமிக்கப்படும் வரை செயற்படுத்தப்படும் தற்காலிக ஏற்பாடாகும். இது தொடர்பான மத்திய கல்வியமைச்சின் சுற்றுநிருபங்களும் உள்ளன. 

பரீட்சையில் தோற்றிய கடமை நிறைவேற்று அதிபர்கள் போட்டிப்பரீட்சையில் சித்தியடையாமல் மீண்டும் தமது தகுதியற்ற நிலையில் அதிபர்களாக செயற்பட முனைவதை வடமாகாணக் கல்வியமைச்சர் ஊக்குவிப்பது மிகமோசமான செயற்பாடாகும். அதேவேளை முறையாகத் தெரிவு செய்யப்படாமல் அதிகாரிகளினதும், அரசியல் வாதிகளினதும் செல்வாக்கால் முறையற்ற விதமாக தெரிவுசெய்யப்பட்ட கடமை நிறைவேற்று அதிபர்களைக் காப்பாற்றுவதற்காக முனையும்  வடமாகாணக்  கல்வி தொடர்பாக  சற்றும் அக்கறையற்ற வடமாகாண கல்வியமைச்சரின் செயற்பாட்டை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

தரம் பெற்ற அதிபர்களுக்கு அவர்களுக்குரிய தகுதியான பாடசாலை வழங்கப்படவேண்டும். வடமாகாண முதலமைச்சர் தரம்பெற்ற அதிபர்களின் நியமனங்கள் தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கிணங்கவும், உத்தரவுக்கமையவும் புதிய அதிபர் நியமனங்கள் நடைபெறவேண்டும். இதனை வடமாகாண முதலமைச்சர் உறுதிப்படுத்தவேண்டும்.  இல்லையேல் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமையில் தரம் பெற்ற அதிபர்களை ஒன்றிணைத்து பாரிய செயற்பாட்டை மேற்கொள்வோம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment