//]]>

Thursday, June 8, 2017

தமிழின உணர்வாளர்களை அடக்க நினையாதீர்கள்: தமிழக அரசுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் யாழில் எச்சரிக்கை


தமிழினப் படுகொலை நினைவேந்தலுக்காக ஒன்று கூடியமைக்காக மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தொண்டர்கள் சாதாரண சட்டத்திலுமல்லாமல் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தமைக்கான நோக்கமென்ன? தமிழின உணர்வாளர்களை அடக்க நினையாதீர்கள். அவர்கள் அடக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் மீண்டும் மேலெழுவார்கள் என்பதைத் தமிழக அரசுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் நாம் எச்சரிக்கையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம் எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தின் மூத்த அரசியல் வாதியுமான எம்.கே.சிவாஜிலிங்கம்.

 ஈழத் தமிழ்மக்களுக்காக ஓயாது போராடி வரும் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் சென்னை மெரினாக் கடற்கரையில் தமிழின அழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுநாளை அனுஷ்டித்தமைக்காகத் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுக் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்தும், அவர்களது விடுதலையை வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை(08) முற்பகல் யாழ். பிரதான பேருந்துத் தரிப்பிடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

 கடந்த 2009 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட போது, தமிழ்மக்களுக்கெதிராகக் கடுமையான போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்ட போது மே-17 இயக்கத்தை ஆரம்பித்து வருடா வருடம் சென்னை மெரினா கடற்கரையில் தமிழினப் படுகொலையை தவறாது நினைவு கூர்ந்து வந்த நிலையிலேயே இந்த வருடம் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் எதிர்பாராத வகையில் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 தமிழினப் படுகொலை நினைவு நாளை நினைவு கூர்ந்தமைக்காக மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், 17 தொண்டர்களும் தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஈழத்தமிழ்மக்களாகிய எங்களை மிகுந்த அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.

 மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் ஈழத்தமிழ் மக்களின் மீட்சிக்காக, தமிழினப் படுகொலைக்காக ஒரு பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழக சட்ட மன்றத்தில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது என்பதைத் தமிழகத்தின் தற்போதைய அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

 மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியையும், தொண்டர்களையும் உடனடியாக குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்துச் சாதாரண சட்டத்தின் கீழ் நிறுத்தங்கள் பார்க்கலாம். அவ்வாறு நிறுத்தப்பட்டால் அவர்கள் அதனைத் துணிவுடன் எதிர்கொள்வார்கள் எனவும் அவர் தமிழக அரசுக்குப் பகிரங்கமாகச் சவால் விடுத்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment