தற்போது தமிழர் தாயகப் பகுதிகளில் பெளத்த குருமாரின் அட்டகாசம் முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்துள்ளதுடன், பெளத்த விகாரைகள்,புத்த சிலைகள் திட்டமிட்டு அமைக்கப்பட்டும் வருகின்றன. பெளத்தச் சின்னங்கள் இவ்வாறு அமைக்கப்பட்டு வருவதால் இந்துசமயத்தின் முதன்மை பின்நிலையை நோக்கிச் செல்கிறது. கதிர்காமம், முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற இந்துமக்களின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் வேற்று மதங்களின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. மறுபுறம் நாங்களே எங்கள் சமயத்தை அழித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டுமெனில் இந்துமக்கள் விழிப்படைய வேண்டும் எனத் தெரிவித்தார் யாழ்ப்பாணம் இந்துசமயப் பேரவையின் தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முதுபெரும் பேராசிரியருமான சி.க.சிற்றம்பலம்.
யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவையின் ஏற்பாட்டில் சிவபூஜா மாநாடு அண்மையில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள இந்துசமயப் பேரவை மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நல்லை நகர் நாவலருக்குப் பின்னர் எமது சமயத்தில் மிகப் பெரிய இடைவெளி காணப்படுகின்றது. இந்த இடைவெளியைப் பூர்த்தி செய்ய வேண்டிய தலையாய கடமை சிவாச்சாரியார்கள் ஒவ்வொருவருக்குமுண்டு.
எமது கோவில்களை உயிரோட்டமுள்ள நிலையங்களாக மாற்றி மக்களை ஈர்க்கின்ற பாரிய பொறுப்பும், கடமையும் சிவாச்சாரியார்களுக்குண்டு. எமது மக்கள் ஆலயங்களில் இடம்பெறுகின்ற கிரியைகளால் ஈர்க்கப்படுகின்ற தன்மை தற்போது இல்லாமல் போய்விட்டது.
சைவசமயிகள் ஏன் ஆலயங்களுக்குச் செல்ல வேண்டும்?, ஆலயக் கிரியைகளால் எமக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கின்றன? என்பது பற்றியெல்லாம் நாவலர் சைவவினாவிடை நூலிலே குறிப்பிட்டுள்ளதுடன், மக்களுக்குத் தெளிவு படுத்தும் வகையில் பிரசங்கமும் செய்தார். ஆனால், இன்று எமது மக்களுக்கு இவை தொடர்பான தெளிவுகளை முன்வைக்க எவருமில்லை.
எங்களுடைய சமயத்தை உயிரோட்டமுள்ள சமயமாக, அறவியல் ரீதியில் வளர்த்தெடுக்கும் சமயமாக, இளம் தலைமுறையை எந்தச் சந்தர்ப்பத்திலும் வழிதவறிப் போகாது இறுக்கமாக எமது அன்புப் பிடிக்குள் கட்டுண்டு இருக்கச் செய்ய வேண்டிய தேவை எமக்கிருக்கிறது என்றார்.
0 comments:
Post a Comment