//]]>

Saturday, January 13, 2018

தைப்பொங்கலையொட்டி இளசுகளை மிஞ்சிய ஏழாலை முதியவரின் செயற்பாடு(Video)

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை நாளை ஞாயிற்றுக்கிழமை(14) சிறப்பாகக் கொண்டாடுவதற்கு யாழ்.குடாநாட்டு மக்கள் தயாராகி வருகின்றனர்.

தைப்பொங்கல் திருநாளன்று பானையில் பொங்கல் பொங்கி வரும் போது வெடி கொளுத்தி மகிழ்வது எம்மவர்களின் நீண்டகால வழமையாக இருந்து  வருகிறது. இதற்கு உதாரணமாகப் பின்வரும் சிறுவர் பாடல் அமைந்துள்ளது. 

தைத்திருநாள் இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல்
இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ்ப் பொங்கல்
கோலமிட்டு விளக்கேற்றி கும்பிடுவார் அம்மா
பாலெடுத்துப் பொங்கலுக்கு பானை வைப்பார் அப்பா
விரும்பிய மா வாழை பலா விதம் விதமாய் கனிகள்
கரும்பிளநீா் படைத்து மனம் களித்திடுவோம் நாங்கள்
வெண்ணிறப்பால் பொங்கிவர வெடி சுடுவோம் நாங்கள்
இன்னமுதப் பொங்கலுண்ண இணைந்து நிற்போம் நாங்கள்

எனினும், எமது சிறுவர்கள், இளைஞர்கள் ஆகியோர் தைப்பொங்கலுக்கு முதல் நாள் இரவு முதலே வெடி கொளுத்தி மகிழ்வர்.இவ்வாறான நிலையில் தற்காலத்தில்  தைப்பொங்கல் திருநாளில் நடுத்தர வயதினர்கள் மற்றும் முதியோர்கள் வெடி கொளுத்துவது அரிதாகவே உள்ளது. ஆனால், யாழ். ஏழாலை தெற்கைச் சேர்ந்த சண்முகம் கந்தசாமி என்ற 70 வயது முதியவரின் செயற்பாடு பலரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

வலிகாமத்தைச் சேர்ந்த ஊடகவியாளரொருவர் செய்தி சேகரித்து விட்டு இன்றிரவு ஏழாலை- சூராவத்தை வீதியால் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது முதியவரொருவர் தன்னந்தனியாக வீதியில் நின்று வெடி கொளுத்திக் கொண்டிருந்தார்.

அவரிடம் இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் பேச்சுக்கு கொடுத்த போது,
தம்பி எனக்கு இப்ப 69 வயது முடிஞ்சு 70 வயசு தொடங்கப் போகுது. நான் காலாகாலமாக விவசாயம் செய்து வாறன்.  எனக்கு இரண்டு பொம்பிளப் பிள்ளையளும், ஒரு படியனும் இருக்கிறான். பொம்பிளப் பிள்ளையளில் ஒருவர் வெளிநாட்டிலயும்,  இன்னொருவர் கொழும்பிலும் இருக்கினம். நானும், மனிசியும், பெடியனும் வீட்டில இருக்கிறம்.

நான் பெட்டி, பெட்டியாக வெடிகள் வாங்கி வைச்சிருக்கிறன். தைப்பொங்கலுக்கு மூன்று நாள் முதலே நான் வெடி கொளுத்த ஆரம்பிச்சிற்றன். இன்றிரவிரவாக விடியுமட்டும் வெடிகொளுத்துவன். என்ர பெடியன் நாளைக்குத் தான் என்னோட சேர்ந்து வெடிகொளுத்துவான் என்றார்.

நீங்க வெடி கொளுத்தினால் உங்கள் மனைவி ஏச மாட்டாரா எனக் கேட்ட போது, "அவள் ஒன்றும் சொல்ல மாட்டாள்" என்றார் குழந்தைத்தனமாக....

('தமிழின் தோழன்')













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment