//]]>

Friday, March 9, 2018

முன்னேற்றகரமான பாதையில் மகளிர் மேம்பாடு:காயத்திரி குமரன் பெருமிதம்(Video)


மகளிர் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாகவும் மற்றும் மேம்பாடு தொடர்பான வேலைப்பாடுகள், செயற்பாடுகள் என்பனவற்றிற்கும் ஒரு முடிவே இல்லையா? .மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வுகளையும், செயற்திட்டங்களையும் செய்து கொண்டிருக்கின்றோமே!  எனச் சிலர் சொல்லுவார்கள். நிச்சயமாக இதுவொரு முடிவுறாப் பயணம் தான். ஆனால், அடைவுகளும் நிச்சயமாகப் பூச்சியமில்லை. ஒவ்வொரு செயற்பாட்டின் அடைவுகளும் வெற்றிகரமானவையே. முன்னேற்றகரமான பாதையில் மகளிர் மேம்பாடு பயணித்துக் கொண்டிருக்கின்றது என ஐக்கியநாடுகள் வதிவிடப் பிரதிநிதி அலுவலக கள ஒருங்கிணைவு உத்தியோகத்தர் திருமதி- காயத்திரி குமரன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய விழிப்புணர்வு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(08) முற்பகல் யாழ்.உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ். மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் திருமதி- சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் இடம்பெற்ற போது  "மகளிர் மேம்பாடு! சவால்களும் சாதனைகளும்" எனும் தலைப்பில் கருத்துரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இந்த வருட சர்வதேச மகளிர் தினத்தில்  ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளது என்னவெனில் பால்நிலை சமத்துவத்தை எட்டுவதற்கும், பெண்களை வலுவூட்டுவதற்குமான எமது செயற்பாடுகள் முடிவுறாதவை என்று குறிப்பிடுகிறார்.

இவை மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசத்தின் மிகப்பெரிய சவாலாகவும் விளங்குகின்றது. இன்றைய உலகின் யதார்த்தமாகவும் இதுவே காணப்படுகின்றது.

நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய் எங்கள் பெண்கள் வீட்டிலிருந்து பொதுவெளிக்கு வந்து புதுமைகள் படைப்பதற்கான சந்தர்ப்பங்களும், வாய்ப்புக்களும், அங்கீகாரங்களும் இன்றைய உலகில் மிகக் காத்திரமாகவே கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய கல்விச் சூழலில் பெண்களின் கால்த்தடம் மிகத் திடமாகவேயிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை ஆண், பெண் பேதமின்றி அனைத்துச் சிறுவர்களுக்குமான தரமான கல்வியும், சமமான தொழில் வாய்ப்புக்களும் கிடைத்துக் கொண்டு தானிருக்கின்றன. அதேபோன்று அனைத்துத் தொழில் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமானதாக இருந்து கொண்டிருக்கின்றது.

அரச, தனியார் சேவை வழங்களில் எவ்வித பாகுபாடோ, பின்னடைவோ இன்றி மகளிர் மேம்பாட்டு நலத் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பெண்கள் முன்னேற்றப் பயணத்தில் எதிர்நோக்குகின்ற தடங்கல்கள், முட்டுக்கட்டைகள் என்பன தொடர்பில் நாங்கள் சிந்திப்போமானால் என்னுடைய பார்வையில் காணப்படுவது அது எங்கள் ஒவ்வொருவருடைய மனங்கள் தான். இதனை நீங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

வன்முறைச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம் எங்கள் ஒவ்வொருவருடைய மனத்திலும் உள்ள பால்நிலை சம்பந்தமான விம்பங்களே. ஆண்களும், பெண்களும் அவ்வாறானதொரு விம்பத்தை மனங்களில் வைத்திருப்பது தான் அநேகமான பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது.

சில நேரங்களில் இது என்னால் முடியுமா? என்னால் இயலாது. நான் பலவீனமானவன் தான். எனக்கு ஆற்றல்கள் குறைவு தானோ!, நான் ஏனையவர்களில் தங்கி வாழவேண்டும் தான் போலும் போன்ற பலவீனமான மன ஓட்டங்கள் ஒவ்வொரு ஆண், பெண் மனங்களிலும் வாழ்க்கையின் ஏதோவொரு காலகட்டத்தில் எதிர்நோக்கியவர்களாகவே இருப்போம். ஆனால், இவ்வாறான பலவீனமான மன ஓட்டங்களை கண நேரத்தில் கடந்து வருபவர்கள் வெற்றியாளர்களாகவும், அந்தப் பலவீனமான மன ஓட்டங்களுடன் தங்கியிருப்பவர்கள் தடுமாற்றத்தைச் சந்திப்பவர்களாகவும் காணப்படுகின்றார்கள். ஆனால், துரதிஷ்ட வசமாக இந்தத் தடுமாறுவோர் கூட்டத்தில் பெண்களின் சதவீதம் சற்று அதிகமாகவே உள்ளது.

எதிர்மறையான எண்ணச் சூழல்கள் சுற்றியுள்ளோராலும் உருவாக்கப்படுகின்றன. ஒருவரைப் பார்த்து ஐயோ..உங்களுக்கு ஏதோ வருத்தம் போலிருக்கிறது...உடல் மெலிவாகவிருக்கிறது, களைப்பாகவிருக்கிறது என நான்கைந்து பேர் தொடர்ச்சியாக கூறினால் சுகதேகியாகவுள்ள ஒருவரும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவார்.

இந்த வருடத்துக்கான ஐக்கியநாடுகள் சபையின் தொனிப் பொருளாக "இது தான் நேரம்" அமைந்துள்ளது. கிராமம், நகரம் ஆகியவற்றிலுள்ள அனைத்துச் செயற்பாட்டாளர்களும் இணைந்து பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்! எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  ஐக்கியநாடுகள் வதிவிடப் பிரதிநிதி அலுவலக கள ஒருங்கிணைவு உத்தியோகத்தர் திருமதி- காயத்திரி குமரன் அங்கு ஆற்றிய உரையின் முழு வடிவத்தையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(செல்வநாயகம் ரவிசாந்-) 












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment