யாழ்.சின்மயா மிஷன் நடாத்திய "திருவாசக முற்றோதல் " நிகழ்வு , மகேஸ்வர பூசையுடன் கடந்த 16 ஆம் திகதி இனிதே நிறைவேறியது. இந்நிகழ்வின் நிறைவில், மார்கழி மாதமும் அதன் சிறப்பு பற்றியும், யாழ். சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார், ஆசியுரை நிகழ்த்தினார்.
அவரது உரை வருமாறு :-
எல்லாம் வல்ல சிவப்பரம்பொருளுடைய திருவருளாலும், குருதேவருடைய குருவருளாலும், இன்றைய திருவாசக முற்றோதல் நிகழ்வு இனிதே நடைபெற்று இருக்கிறது. அந்த விதத்திலே, எங்களுடைய தமிழ் வேதங்களாகிய, பன்னிரு திருமுறைகளிலே, திருவாசகம் எட்டாம் திருமுறையாகும். இது தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஞானத்தில் ஞானம் என்கின்ற நிலையிலே மாணிக்கவாசக சுவாமி அவர்கள் அருளிச் செய்த இந்த திருவாசகப் பாடல்கள் இறை அனுபவத்தை எடுத்துச் சொல்லக்கூடிய ஞானக் கருத்துக்கள் பொதிந்தவையாக திகழ்கின்றன.
இன்று மார்கழி மாதப்பிறப்பு. மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு அதிகாலை நேரமாக இருக்கின்ற, தட்க்ஷ்ணாயத்துடைய நிறைவுப் பகுதியாக இருக்கின்றது. தேவர்களுக்கு அதிகாலை நேரமாக இருக்கின்ற பிரம்ம முகூர்த்தம் ஆன்மீகத்திற்கு உத்தமமான ஒரு முகூர்த்தமாக இருக்கின்றது.
" மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்திலே" என்று சொல்லியிருக்ககூடிய அளவுக்கு அற்புதமான மனிதப்பிறவியை இந்த பூலோக்திலே நாங்கள் எடுத்திருக்கின்றோம்.அந்த மனிதப் பிறவினுடைய நோக்கத்தை அறிவதற்கு அதன் மகத்துவத்தை உணருவதற்கு, நாங்கள் எங்களுடைய வாழ்க்கையிலே, ஒரு வருடத்திலே 12 மாதங்கள் இருக்கின்றன. 12 மாதங்களிலே ஒரு மாதத்தை அதாவது மார்கழி மாதத்தை, ஆன்மீக செயற்பாடுகளுக்காக ஒதுக்க வேண்டும். மார்கழி மாதத்திலே எங்களோடு நாங்கள் இருக்கின்ற நிலையை எல்லாம் வல்ல சிவப் பரம்பொருளைத் தியானிக்கின்ற நிலையை பேண வேண்டும்.
எனவே, இந்த மார்கழி மாதத்திலே அனைத்து சுப காரியங்கள், வைபவங்கள், விழாக்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு ஆன்மீக காரியங்களுக்கு மாத்திரம், ஞானத்தை அடைகின்ற முயற்ச்சிக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்துக்களுடைய புனித நூலாகிய ஶ்ரீமத் பகவத் கீதையிலே, பகவான் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா, " மாதங்களிலே தான் மார்கழி மாதம் " என்று குறிப்பிட்டு இருக்கின்றார். அவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த மாதத்திலே நாங்கள் இந்த மண்ணிலே நல்ல வண்ணம் வாழ்வதற்குரிய வழிபாடுகளையும் எங்களுடைய இந்த பாராயணங்களையும் செய்ய வேண்டும்.
0 comments:
Post a Comment