யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் அகில இலங்கை அமுதசுரபிக் கலாமன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த மக்கள் கவிஞன் மஹாகவி பாரதியார் பிறந்த தின விழா இன்று (11) யாழ். நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெற்றது.
விழாவின் தொடக்கமாக நல்லூரிலுள்ள மஹாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்வணக்கம் இடம்பெற்று நிகழ்வுகள் ஆரம்பமாகின.
வரவேற்புரையை அகில இலங்கை அமுதசுரபிக் கலாமன்ற அமைப்பாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி ஆற்றினார். கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் சிறப்புரையாளருக்கான அறிமுகவுரையை ஆற்றினார்.
குறித்த விழாவிற்குத் தமிழகத்தின் பிரபல பேச்சாளர்களில் ஒருவரும், கவிஞருமான நெல்லைக் கண்ணன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் யாழ். மண்ணின் கலைஞர்கள் இணைந்து வழங்கிய பாரதி பாடல்கள் இசைவிருந்து யாழ். பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வராவின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து மஹாகவி பாரதியார் பாடி அனைவரையும் கவர்ந்த யாழ். மண்ணின் பாடகர்களும், இசைவார்த்தியக் கலைஞர்களும் விழாக் குழுவினர் சார்பாகச் சிறப்புக் கெளரவம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.
குறித்த விழாவில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்.சின்மயா மிஷன் தலைவர் பிரம்மச்சாரி ஜாக்ரத சைதன்ய சுவாமிகள், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், போன்றோரும்
வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், பாலச்சந்திரன் கஜதீபன், வடக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி ச.அமிர்தலிங்கம், மற்றும் யாழ்.பல்கலைக்கழக வணிகபீட விரிவுரையாளர் சோ.தேவராஜா, யாழ்.பல்கலைக் கழக ஆங்கிலத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன், கல்வியியலாளர்கள், பல்துறை சார்ந்தவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இந்த விழாவில் யாழ்.மாவட்டத்திலிருந்து மாத்திரமல்லாமல் கிளிநொச்சி, முல்லைத்தீவு,மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்தும் பெருந்திரளானோர் தமிழ் உணர்வுடன் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
0 comments:
Post a Comment