//]]>

Friday, December 16, 2016

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி: தனித்துவமாகச் செயற்படவும் முடிவு (Photos)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்த வகையில் எங்கள் அரசியல் செயற்பாடுகளை எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்க நாங்கள் தயாராகவில்லை.  கடந்த ஒன்றரை வருடங்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நாங்கள் கொடுத்த கால அவகாசம் இன்றுடன்(நேற்று) முடிவடைகிறது. ஆகவே, இனியும் அவர்களுடன் இணைந்த வகையில் எங்களுடைய அரசியலை முன்னெடுப்பதில் எந்தவிதப் பயனுமில்லை. இந்த நிலையில் நாங்கள் தனித்துவமாகச் செயற்படுவதென முடிவெடுத்துள்ளோம். அந்த வகையில் வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் வாழும் எமது ஆதரவாளர்களை ஒன்று திரட்டிப் பிரமாண்டமான முறையிலானதொரு அரசியல் நகர்வை எங்கள் தாயகப் பகுதியில் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் என்பதை எங்களுடைய தீர்மானமாக நாங்கள் அறிவிக்கிறோம் என ஜனாநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

வடகிழக்கில் தற்போது காணப்படுகின்ற அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும், ஜனநாயகப் போராளிகள் கட்சி இது தொடர்பில் எடுத்துள்ள முடிவுகள் தொடர்பாகவும் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுப்  புதன்கிழமை(14) பிற்பகல்-01.30 மணி முதல் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த-2009 ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கப்பட்ட காலத்திற்குப் பின்னர் தமிழ் மக்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் சம்பந்தமாக நாங்கள் மிகவும் அவதானமாகக் கண்காணித்து வந்தோம். விடுதலைப் புலிகள் அமைப்பால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் மந்த கதியை நோக்கிச் செல்வதை அவதானிக்க முடிந்தது. இந்த நிலையில் அந்தக் கட்சியை பலமான கட்சியாக மாற்றித் தமிழர்களுக்கான தேசியத்தை வென்றெடுக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டோம். அந்த வகையில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை நேரடியாகச் சந்தித்துப் பேசினோம். அதன் பின்னர் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா போன்றோருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தினோம். கடந்த ஒன்றரை வருடங்களாகத் தொடர்ச்சியாக இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தது. ஆனாலும், அந்தக் கட்சி இதுவரை தமிழர்களின் விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவை எடுக்கவில்லை. 


எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் பாலா அண்ணாவின்  நினைவு நாள் அனுஸ்டிக்கப்படும் இவ்வேளையில் நாங்கள் தீர்க்கமானதொரு முடிவிற்கு வந்துள்ளோம். எதிர்வரும் புதிய ஆண்டை நாங்கள் மகிழ்வுடன் வரவேற்று எங்கள் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க ஜனநாயக வழியில் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைத்துவமாகிய ஜனநாயகப் போராளிகள் கட்சி நகர்வுகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தற்போது சொல்லப்படுகின்ற அரசியல் தீர்வுத் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம். ஆனால், தமிழர்களுடைய விடுதலைக்காகப் போராடி வீர மரணம் அடைந்த மாவீரர்களின் குடும்பங்கள், புத்தி ஜீவிகள், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள், தளபதிகள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இவர்கள் அனைவரும் எங்கள் மக்களை நேசித்தவர்கள் . மக்களுக்காகத் தியாகம் செய்தவர்கள். இவர்கள் அனைவருடனும் தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களுடைய ஆலோசனைகளையும் பெற்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தீர்வுத் திட்ட யோசனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். 

எமது மக்கள் அடக்கப்படும், ஒடுக்கப்படும் எந்தவொரு காலகட்டத்திலும் விடுதலைப் புலிகள் எந்தவொரு வடிவிலாவது வந்து எமது மக்களை மீட் டெடுப்பார்கள் என்ற செய்தியையும் நாங்கள் இங்கு கூறி வைக்க விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார். 

இந்த ஊடக சந்திப்பில் ஜனநாயகப் போராளிகளின் கட்சியின் தலைவர் சி.வேந்தன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி, பொருளாளர் சு.விதுரன், யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களின் இணைப்பாளர் த.இனியவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இதன் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆலோசகர் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் பத்தாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment