//]]>

Friday, December 22, 2017

பெளத்த பிக்குவை யாழ். முற்றவெளியில் எரியூட்ட எடுத்துள்ள நடவடிக்கைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கடும் எதிர்ப்பு(Video)


எந்தவித உத்தரவுகளுமின்றி யாழ். முற்றவெளியில் இந்து ஆலயம் மற்றும் தமிழாராய்ச்சியில் கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் விகாராதிபதியான பெளத்த பிக்குவை இராணுவத்தினர் எரியூட்டுவதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கை தமிழ்மக்களின் கலாசாரத்தை அழிவுக்குள்ளாக்குகின்ற அல்லது கேலி செய்யக் கூடியதொரு செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறித்த செயற்பாடு தொடர்பில் தனது கடும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளார்.

இன்று(22) பிற்பகல் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். நாகவிகாரையின் விகாராதிபதியான பெளத்த பிக்கு கொழும்பில் காலமாகியுள்ள நிலையில் அவரது உடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்து இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை இராணுவம் மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெளத்த பிக்குவிற்குக் கெளரவம் செலுத்துவதில் எந்தத் தவறும்  கிடையாது. அவருக்கு நாமும் எமது அஞ்சலிகளைச் செலுத்தத் தயாராகவேயிருக்கின்றோம்.

ஆனால்,தமிழ்மக்களின் கலாசாரம், சம்பிரதாயங்கள் சகலவற்றையும் மீறி  எங்களுடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இராணுவம் தான் விரும்பியவாறு செயற்படுவது அநாகரீகமானதும், தமிழ்மக்களைத் துன்புறுத்துவதுமான செயற்பாடாகும்.

யாழ்ப்பாணம் முற்றவெளி முனியப்பர் ஆலயம் அமைந்துள்ள பகுதியாகவும், தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களின் நினைவுத் தூபியைத் தாங்கிய ஒரு பகுதியாகவுமுள்ளது. அது மாத்திரமல்லாமல் சனசந்தடி மிக்க யாழ். நகரில் முற்றவெளிப் பகுதி அமைந்துமுள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment