//]]>

Thursday, December 22, 2016

அங்கவீனமான முன்னாள் போராளிகளின் உரிமைகள் மீறப்படுவதாகக் குற்றச் சாட்டு (Photos)


எமது நாட்டிலே கடந்த முப்பது வருட காலமாக ஏற்பட்ட போர்ச் சூழலால் எமது உரிமைக்காக, சமூதாயத்தின் தேவைக்காகப் புறப்பட்ட முன்னாள் போராளிகள் இன்று தமது கை, கால்களையும், பார்வையையும் இழந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். அவ்வாறானவர்களை இந்தச் சமூதாயம் ஒரு பகுதியிலே நிறுத்தி விட்டுச் செல்ல முடியாது. இந்தச் சமூதாயத்திற்காக இவர்கள் சிந்திய வியர்வையும், இரத்தமும் தான் இன்று புலம்பெயர் நாடுகளில் எம்மவர்களுக்குப் பிரஜாவுரிமை கிடைப்பதற்குக் காரணம் எனத் தெரிவித்த வன்னி விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ச. ரூபராஜ் அங்கவீனமான முன்னாள் போராளிகளின் உரிமைகள் மீறப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.  

வன்னியில் கடந்த கால யுத்தத்தால் இரு கண்களினதும் பார்வையை இழந்த முன்னாள் போராளிகள் 75 பேருக்கு யாழ்.வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் வெள்ளைப் பிரம்புகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(22) முற்பகல்- 11.30 மணி முதல் யாழ். வணிகர் கழகப் பணிமனையில் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரன் தலைமையில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் 265 பேரை உறுப்பினர்களாகக் கொண்டு செயற்படுகிறது. வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் பார்வையற்றவர்கள் அனைவரும் பிறவியிலேயே பார்வைக் குறைபாடுகளுடன் பிறக்கவில்லை. இறைவனால் அவர்கள் படைக்கப்படும் போது நல்ல பார்வைத் திறனுள்ளவர்களாகவும், திடகாத்திரமானவர்களாகவும் காணப்பட்டார்கள்.அவர்கள் முன்னர் பல்வேறு தொழில்களைத் திறம்பட ஆற்றிவந்தவர்கள். 

நிச்சயமாகப் புலம்பெயர் சொந்தங்கள் எங்களை நினைக்க வேண்டும். எமக்குரிய  உதவிகளைச் செய்ய வேண்டும். ஆனால், பலர் இவ்வாறு சிந்திக்கத் தவறுகின்றனர். சிலர் தான் சிந்திக்கிறார்கள். 

வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் பல நிறுவனங்களிடமுமிருந்து பாதிக்கப்பட்ட எமது உறுப்பினர்களுக்கு உதவி பெற்றுக் கொடுப்பதற்கு முயன்று வருகிறது. 

எங்களுக்குப் பல தேவைகளிருக்கின்றன. அந்தத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தர வேண்டியது இந்தச் சமூதாயத்தின் கடமை. ஆனால், இந்தச் சமூதாயம் அவ்வாறு செய்வதில்லை. 

நாங்கள் வங்கியில் பணம் வைப்புச் செய்யவோ,கடன் பெறவோ அல்லது நகைகளை அடகு வைக்கவோ சென்றால் "நீங்கள் விழிப்புலனற்றவர்கள் உங்களுக்கு இவ்வாறெல்லாம் செய்ய முடியாது என எங்களுக்கு நேரடியாகவே கூறுகிறார்கள். 

போக்குவரத்துத் துறையை எடுத்து நோக்கினால் எங்களுக்கெனத் தனியாக ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கென வழங்கப்பட்டுள்ள வெள்ளைப் பிரம்பைக் காட்டிப்  பஸ்ஸை மறித்தாலும் அவர்கள் பஸ்ஸை நிறுத்துவது கிடையாது. எங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களை வழங்குவதும் கிடையாது.  

நடத்துனரிடம் இது குறித்துக் கேட்டால் ஆட்கள் எழும்புகிறார்களில்லை என்று சொல்கிறார். எம்மைப் போன்ற விழிப்புலனற்றவர்களையும், அங்கவீனர்களையும் பஸ்ஸில் நிற்க வைத்துக் கொண்டு செல்வதற்கு அவர்களால் எவ்வாறு முடிகிறது? எனவும் கேள்வியெழுப்பினார். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment