யாழ்ப்பாண மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சைகள் மற்றும் பொது வைத்திய ஆலோசனை போன்றவற்றை வழங்குகின்ற பத்துக்கும் மேற்பட்ட சுகாதாரக் கவனிப்பு நிலையங்கள் கடந்த கால யுத்தத்தினால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இயங்க முடியாத நிலையில் காணப்பட்டன எனத் தெரிவித்தார் வடக்கு முதல்வர் க.வி.விக்கினேஸ்வரன்.
மீளப் புதுப்பிக்கப்பட்ட பாஷையூர் ஆரம்பச் சுகாதார மகப்பேற்று நிலையத் திறப்பு விழா இன்று புதன்கிழமை(28) முற்பகல்- 10.30 மணி முதல் யாழ்ப்பாணம் கடற்கரை வீதியிலமைந்துள்ள மேற்படி நிலையத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
போரால் பாதிக்கப்பட்ட இந்த நிலையங்களை உடனடியாகப் புனரமைப்புச் செய்வதற்கு ஏற்ற நிதி மூலங்கள் கிடைக்கப் பெறாத நிலையில் யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் கோரிக்கையின் பேரில் யாழ்ப்பாணம் தண்ணீர்த் தாங்கிக்கு அருகாமையில் அமைந்திருந்த யூ.பி.லி மகப்பேற்று நிலையத்தினைப் புனரமைப்புச் செய்து மீள இயங்கச் செய்வதற்கான உதவிகளை வழங்கி IOC நிறுவனத்தினர் அதனைப் புனரமைப்புச் செய்து மீளக் கையளித்தனர்.
அவர்களின் பங்களிப்புடன் புனரமைப்புச் செய்யப்பட்ட மகப் பெற்று நிலையம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அதாவது 10.4.2015 இல் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிலையம் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது என அறிகிறேன்.
இந் நிலையில் மீண்டும் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரியின் கோரிக்கைக்கமைவாகப் பாசையூர் மருத்துவ நிலையம் 5,920,970 ரூபா செலவில் மீள் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டிருப்பதையிட்டுப் பெருமகிழ்வடைகின்றோம்.
கடந்த காலப் பாரிய யுத்த நடவடிக்கைகள் இப் பகுதிகளில் பேரழிவுகளை ஏற்படுத்தியது மட்டுமன்றிப் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரிழப்புக்களுக்கும், சொத்துப் பொருட் சேதங்களுக்கும் காரணமாயிருந்தது. அத் தாக்கங்களிருந்து விடுபட முடியாத மக்கள் ஓரளவுக்காவது அவர்களின் தேவைகளை நிறைவுறுத்தும் வண்ணம் IOC நிறுவனத்தார் உதவி வழங்கியிருப்பது போற்றுதற்குரியது.
யுத்தத்தின் போது சுடுகாடு போன்று காட்சியளித்த யாழ்ப்பாண நகரம் தற்போது மெல்ல மெல்ல அதன் முன்னைய பொலிவை அடைவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் இதுபோன்ற உதவிகள் எம் மக்களின் வளர்ச்சிக்குப் பெரும் உதவியாகவிருக்கும்.
அதிக இலாபமூட்டக் கூடிய கம்பனிகளும், வர்த்தக நிறுவனங்களும் இது போன்ற சமூகப் பொறுப்புணர்வின் கூட்டுப் பொறுப்பில் தங்களையும் பங்காளிகளாக்கி இச் சமூகம் விரைந்து முன்னேறப் பாடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
0 comments:
Post a Comment