அற வழியில் போராடிய மாணவர்கள் கலைந்து சென்று வன்முறைச்செயல்களில் ஈடுபடுவதாகவும் அதை தடுக்கின்ற விதமாகவே காவல்துறையினர் தடியடி நடத்துகின்றனர் என்றும் செய்திகள் வேகமாக பரவின. ரஜினி காந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் மாணவர்கள் இதனால் போராட்டத்தை கைவிடும்படியாக அறிக்கைகளும் பேட்டிகளும் கொடுக்கத் தொடங்கினர். அதே சமயம் காவல் துறையினர் ஆட்டோவுக்கு தீ வைக்கும் வீடியோக்கள், போராட்டத்துக்கு சம்மந்தமில்லாத வீடுகளில் உள்ள பெண்களை தாக்கும் வீடியோக்கள், வாகனங்களை அடித்து நொறுக்கும் வீடியோக்கள் போன்றவை சமூக வலைதளங்களில் வெளியாகி காவல்துறையின் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவந்தது. அப்போது வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் தான் என்று வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் கேள்விக்குள்ளானது.
மெரினா கடற்கரையில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களின் நிலை எப்படியுள்ளது என்பதை அறிய மாலை மறுபடியும் அங்கு சென்றிருந்தோம். அங்கு இந்தச் சூழல் வேறுமாதிரியாக இருந்தது. ஐயாயிரம் பேருக்கும் மேலாக இருந்த மாணவர்கள் மற்றும் மீனவர்கள், பெண்கள் ஆகியோர் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். நகருக்குள் என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது என்பதைப் பெரும்பாலானோர் அறியாமலேயே இருந்தனர்.
அப்போது தான் நடிகர் ராகவா லாரன்ஸ் மாணவர்களிடம் பேச வந்தார்.
“நமது கோரிக்கை ஜல்லிக்கட்டு போட்டி நடக்க வேண்டும் என்பது தானே? அது இப்போது சட்டமாக நிறைவேற்றப்பட்டுவிட்டது. நாம் இவ்வளவு நாள் நடத்திய போராட்டத்துக்கு நல்ல தீர்வு கிடைத்து விட்டது. தமிழக அரசு இந்த பிரச்சனைக்கு நாம் கேட்ட அதே சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. இது நம் போரட்டத்துக்கு கிடைத்த வெற்றி. எனவே இப்போது நமது போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார். அப்போது மாணவர்கள் இது பற்றி தங்களுக்குள்ளே பேசத் தொடங்கினர். அப்போது வந்த ஆர்.ஜே.பாலாஜியும் இதையேக் கூற மாணவர்கள் சில பேர் “இதை சகாயம் ஐ.ஏ.எஸ் போன்ற அதிகார்களோ அல்லது நீதிபதிகளோ வந்து விளக்கிச் சொன்னால் தான் ஏற்போம்” எனக் கூறிவிட்டனர். பின் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுக்கச் சென்றார் ஆர்.ஜே பாலாஜி. அப்போது மாணவர்கள் அவரிடம் சொன்ன தகவலையே மீடியாவிலும் சொன்னார்.
மாணவர்களுக்கு இந்த சட்டம் பற்றிய குழப்பம் நிலவியதை நேரடியாக காணமுடிந்தது. அப்போது தான் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடற்கரைக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து நீதிபதி ஹரி பரந்தாமன் மாணவர்களை நோக்கி வந்தார். அவரோடு தோழர் தியாகுவும் உடன் இருந்தார். அப்போது மாணவர்களின் கவனம் முழுவதும் அவர்களை நோக்கித் திரும்பியது. நீதிபதி ஹரி பரந்தாமன் கைக்கு மைக் வந்ததும் மாணவர்கள் அவர் பேசுவதை கேட்கத் தொடங்கினர்.
“அவசர சட்டம் என்பது சட்டமன்ற கூட்டத்தொடர் கூடாத சமயத்தில் கூட்டப்படுவது. அப்படி கொண்டு வரும் சட்டம் ஆறு மாத காலத்திற்கு செல்லுபடியாகும். அதற்குள் சட்டமன்றத்தை கூட்டி முறைப்படி அந்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன்படி இன்று இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேறியுள்ளது.” என விளக்கினார். நீதிபதியின் பேச்சை கலைப்பதற்கும் காவல்துறையினர் முயன்றனர். அது பலனளிக்கவில்லை. சட்ட நகலை மாணவர்களிடம் நீதிபதி காட்டினார். “உண்மையில் இதன் அஃபீஷியல் நகலை அவர்கள் முறைப்படி உங்களிடம் காட்டித் தெரிவித்திருந்தால் ஒரு தெளிவு கிடைத்திருக்கும்,. ஆனால் அவர்கள் அதை ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை.” எனக் கூறினார்.
உண்மையில் நீதிபதியின் பேச்சு மாணவர்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. நீதிபதி சென்றதும் மாணவர்கள் இது குறித்து தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கினர். கூடியிருந்த மாணவர்களில் பாதி பேர் நீதிபதியின் கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொண்டன்ர். அதனால் அவர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு செல்லலாம் எனக் கூறினர். ஆனால் ஒரு தரப்பினரோ இது மாநில அரசு கொண்டு வந்திருக்கும் சட்டம். மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் இதற்கு எதிரான இன்னொரு சட்டத்தை கொண்டு வரலாம். காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை இன்னும் இவர்கள் நீக்கவில்லை. மேலும் பீட்டா அமைப்புக்கு எதிராக தடை எதுவும் இன்னும் விதிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது நாம் பாதியிலேயே கலைந்து செல்வது போராட்டம் தோல்வியில் முடிந்தது போல் ஆகிவிடும். என கூறினர் .
ஆனால் ஒரு தரப்பு நீதிபதியின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு கலையத் தொடங்கியது. இதனால் கூட்டம் பாதியாய் குறைந்தது. இதனால் கொஞ்ச நேரம் அங்கு சலசலப்பு உருவாகியது. மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு பின் புதியதாக மாணவர்கள் மீண்டும் கடற்கரையை நோக்கி வரத் தொடங்கினர்.. ஆனால் இதை கவனித்த காவல்துறையினர் கடற்கரையை நோக்கி வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். காவல்துறையின் இந்தப் போக்கு மறுபடியும் தடியடியில் போய் முடிவதற்கான வாய்ப்பு உள்ளது என மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் மீனவர்கள் படகுகள் மூலமாக போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க உள்ளே நுழைந்தனர். அந்த இரவு நேரத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை விட மீனவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.
ஜல்லிக்கட்டுக்காக பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும். பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும், பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என மாணவர்களும் மீனவர்களும் தொடர்து போராட இரவு 11மணி அளவில் அங்கிருந்து நகர்ந்தோம். மாணவர்களின் அருகில் எந்த காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இல்லை.
உயர்நீதின்றம் காவல்துறையின் அத்துமீறைலை கண்டித்துள்ளது. அமைதி வழியில் போராடுபவர்கள்மீது தடியடி நடத்தக்கூடாது என ஆணை பிறப்பித்துள்ளது. அதனால் போலீஸ் முற்றிலும் கடலில் இருந்து வெளியேறி கடற்கரைச் சாலைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அமர்ந்திருந்தனர். போக்குவரத்து இயல்பாகியிருந்தது. மக்கள் கடற்கரை சாலைகளில் வர அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
வெளியில் வந்து கடற்கரைச் சாலையைக் கடக்கும் போது தான் மற்ற பகுதிகளில் நடந்த கோரங்களைப் பார்க்க முடிந்தது. கடற்கரையில் அந்த குளிரில் மாணவர்கள் உறுதியாக போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்க மீனவர்கள் பக்க பலமாக இருப்பதை மீண்டும் ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
-மதரா
நன்றி: மின்னம்பலம்
0 comments:
Post a Comment