இராணுவத்தினரை இறக்கி மயிலிட்டித் துறைமுகத்தை விடுவிக்கப்படாது எனத் தடுக்கிறார்கள். இதனை யார் பின்புலமாகவிருந்து செயற்படுத்துகிறார்களோ தெரியவில்லை. இந்த நிலையில் மயிலிட்டித் துறைமுகத்தை விட்டுத் தர அவர்கள் தயாராகவில்லை. மயிலிட்டித் துறைமுகத்தைப் புனரமைப்பதற்கு அரசாங்கம் குறிக்கப்பட்ட நிதியை ஒதுக்கியிருப்பதாகக் கூறுவது கண்துடைப்பு எனத் தெரிவித்தார் யாழ். மாதகல் மேற்கு கிராமிய கடற்தொழிலாளர் அமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றுப் புதன்கிழமை(18) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வலி.வடக்கில் விடுவிக்கப்படாத கரையோரத்தை அண்டிய பகுதிகளில் ஜோக்கட் கம்பனி, ஹோட்டல், விடுதிகள், மாட்டில் பால் கறத்தல், தோட்டம் செய்தல் ஆகிய நடவடிக்கைகள் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய செயற்பாடுகள் எங்கள் மக்களை அங்கே செல்லவிடாது தடுக்கும் செயற்பாடுகளாகும். ஆயுதக் கிடங்கு காணப்படுவதாக நாசுக்காகச் சொல்லிக் கொண்டு இவ்வாறான இடங்களைத் தக்க வைக்க முயற்சிக்கிறார்கள். எங்களுடைய மீனவர்களையோ அல்லது மக்களையோ மீள்குடியேற்ற முடியாத இடங்கள் என எதுவுமில்லை. அரசு நினைத்தால் எல்லோரையும் அங்கே குடியமர்த்தலாம்.
தையிட்டியைச் சேர்ந்த ஏராளமான மீனவ குடும்பங்கள் தற்போது காணப்படுகின்றனர். ஊரணியில் மீனவ குடும்பங்கள் பலரும் பாரம்பரியமாக வாழ்ந்தவர்கள். ஊரணி, தையிட்டியைச் சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களே தற்போது மீளக் குடியமர்ந்துள்ளனர். இன்னும் மீளக் குடியமர வேண்டிய பல மீனவத் தொழிலாளர்கள் காணப்படுகிறார்கள்.
இந்தப் பகுதிகளிலிருந்து தற்போது இடம்பெயர்ந்து வாழும் மீனவத் தொழிலாளர்கள் கூலித் தொழிலுக்குச் செல்வதுடன், பழைய இரும்புகள் பொறுக்கியும் தமது அன்றாட சீவியத்தை நடாத்தி வருகின்றனர்.
அண்மையில் தையிட்டியில் மீன்பிடித் துறைமுகம் விடுவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், விடுவிக்கப்பட்ட பகுதி உண்மையில் ஒரு மீன்பிடி இறங்கு துறை இல்லை எனவும், விடுவிக்கப்பட்ட சுமார் 400 மீற்றர் பகுதி படகுகள் அணைவதற்குக் கூடப் பொருத்தமில்லாத இடம் என மக்கள் தரப்பில் சொல்லப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? என ஊடகவியாளரொருவர் கேட்டதற்கு அதற்குப் பதிலளித்த அவர் தெரிவிக்கையில்,
அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டி அம்பேத்தை என்ற இடம் துறைமுகமல்ல. படகுகளைக் கரையில் கொண்டு சென்று கட்டலாம். கற்பாறைகளுள்ள இடம். அதற்குச் சமீபத்திலேயே மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் காணப்படுகின்றது .
அந்த இடத்தில் தொழில் செய்வதற்கான அனுமதியைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால்,துறைமுகம் இன்னும் விடுபடவில்லை என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தீவக கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் கதிர்காமு சண்முகராசா, ஊர்காவற்துறைக் கடற்தொழிலாளர் சம்மேளனங்களின் பிரதிநிதி ஜோன்பிள்ளை அன்ரன் சாள்ஸ் ஜான்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment