//]]>

Sunday, January 29, 2017

யுத்தம் நிலவிய காலகட்டத்தில் யாழில் முதல் அடிவாங்கிய கிராமம் எது தெரியுமா? (Photos)




யுத்தம் நிலவிய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் போர் மூளும் சந்தர்ப்பங்களில் முதலில் அடிவாங்கும் கிராமமாகப் புன்னாலைக்கட்டுவன் வடக்குக் கிராமமே  காணப்பட்டது. இதன் காரணமாக  மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டு வந்தது. 

இடப் பெயர்வின் காரணமாக இந்தக் கிராமத்தின் சிறப்புக்கள், பொலிவு என்பன இன்றைய இளைய சமூகத்தினருக்குத் தெரியாமல் போயுள்ளது  எனத் தெரிவித்தார் உடுவில் பிரதேச செயலாளர் திருமதி- மதுமதி வசந்தகுமார்.

யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும், சமாதான நீதவானுமான இரத்தினசிங்கம் கெங்காதரனின் பெருமளவான நிதிப்ங்களிப்பிலும், அவரது சகோதரர்களின் ஒரு தொகை நிதிப் பங்களிப்பிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீதுர்க்கா முன்பள்ளிக்கான புதிய கட்டடத் திறப்பு விழா நேற்றுச் சனிக்கிழமை(28) முற்பகல் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

இடப்பெயர்வின் பின்னர் ஒரு கிராமத்தில் மக்கள் மீளக் குடியமரும் போது எதிர்நோக்கும் இன்னல்கள் மிகப் பாரியவை. 25 வருட காலமாக மக்களின் நடமாட்டமே இல்லாமலிருந்த கிராமத்தை நாங்கள் மீள்குடியேற்றக் கிராமம் என்று திறந்து விடும் போது  வசதிகள் குறைவாகத் தான் காணப்படும். அவ்வாறு குறைந்த வசதிகளுடன் மீளக் குடியேறிய புன்னாலைக்கட்டுவன் வடக்கு வாழ் மக்கள் மிகவும் குறுகிய காலத்தில் தமது ஒற்றுமையான செயற்பாட்டின் காரணமாக முன்னேற்றி வருவது பாராட்டுக்குரியது. 

கிராமத்தின் வளர்ச்சியைத் திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டிய இன்றைய காலத்தில் கிராமத்தில் வாழும் அனைத்துத் தரப்பினரதும் இன்றியமையாததொரு செயற்பாடாகும். 

சுகமான காற்றைச் சுவாசித்து இயற்கையுடன் இணைந்த கல்வியைப் பெறுவதற்கு கிராமங்கள் எமக்கான வரப்பிரசாதங்களாகவுள்ளன. ஆகவே, கிராமங்களில் வளரும்,கல்வி கற்கும் குழந்தைகள் வாழ்க்கையில் அருமையான வாய்ப்பைப் பெற்றவர்களாகவே நான் கருதுகிறேன். 

இந்த வருட ஆரம்பத்திலிருந்து வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும் காலை-07.30 மணிக்கே ஆரம்பமாகின்றன. இந்த விடயம் மாணவர்களின் பெற்றோர்களுக்குச் சவாலாகவிருந்தாலும் அதற்கான முக்கிய காரணம் எம் பிள்ளைகளை நாம் கிராமத்திலோ அல்லது அயற்பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் தான். இதனை நாங்கள் உணர்ந்து எமது பிள்ளைகளை ஆரம்பக் கல்விக்காகக் கிராமப்புறப் பாடசாலைகளில் இணைத்து இயற்கையான கல்வியை வழங்க முன்வர வேண்டும். 

தற்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் பெரியோர்களை எடுத்து நோக்கினால் அவர்களின் ஆரம்ப வாழ்க்கை கிராமப்புற வாழ்க்கையாகவே அமைந்திருக்கும். கிராமத்தின் இயற்கை அழகை இரசித்து அங்கு வீசும் இதமான காற்றைச் சுவாசிப்பது இன்றைய எமது நவீன வாழ்க்கை முறையால் தொலைந்து போயுள்ளது. எல்லோரும் நகரை நோக்கி ஓடுவதும், நகரமயமாக்களில்  ஆர்வம் கொண்டிருப்பதும் தான் இதற்கான காரணம்.

ஆரம்பக் கல்வியை கிராமப் புறப்  பாடசாலைகள் மூலம் நாம் எமது பிள்ளைகளுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் அடுத்த கட்ட வளர்ச்சியில் கல்வியின் பால் கொள்ளும் ஆர்வம், ஒவ்வொரு விடயங்களையும் விளங்கிக் கொள்ளும் திறமை என்பன அதிகமாகக் காணப்படும். 

ஆகவே, புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பிரதேசத்தில் தற்போது படிப்படியாக வசதிகள் அதிகரித்து வரும் இவ் வேளையில் இடம்பெயர்ந்தும், புலம்பெயர்ந்தும் வாழும் மக்களனைவரும் கிராமத்தில் பற்றுள்ளவர்களாக மீள்குடியேற வேண்டும் எனப் பிரதேச செயலர் என்ற ரீதியில் நான் உங்களிடம் அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன் எனவும்  தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment