//]]>

Monday, February 20, 2017

மகா சிவராத்திரியை முன்னிட்டு நல்லூரிலிருந்து திருக்கேதீஸ்வர ஆலயம் நோக்கிப் பாத யாத்திரை ஆரம்பம் (Photos)


சைவப் பெருமக்களின் உன்னதமான விரதங்களில் ஒன்றாகப் போற்றப்படும்  மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு உலக சைவத் திருச் சபையின் இலங்கைக் கிளையின் ஏற்பாட்டில்  பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தை நோக்கிய பாத யாத்திரை  நேற்று ஞாயிற்றுக்கிழமை(19) வரலாற்றுப் புகழ் மிக்க யாழ்.நல்லூர்க் கந்தன் ஆலயத்திலிருந்து  ஆரம்பமாகியுள்ளது

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்துக் கொண்ட அடியவர்கள் நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலிலிருந்து முற்பகல்-09.15 மணியளவில் குறித்த பாத யாத்திரையை ஆரம்பித்தனர். அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சிவலிங்கப் பெருமான் வீற்றிருக்க ஆரம்பமான இந்தப் பாத யாத்திரை உலக சைவத் திருச்சபையின் இலங்கைக்கான தலைவர் சைவப்புலவர் சி.சுமூகலிங்கம் தலைமையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை நோக்கிச் செல்கிறது.  

யாழ்.சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள், கோண்டாவில் சபரீச ஐயப்பர் ஆலயத்தின் குருசாமி கி.ஹரிகரசுத சிவாச்சாரியார் ஆகியோர் குறித்த பாத யாத்திரையை ஆசிர்வாதம் வழங்கி ஆரம்பித்து வைத்தனர்.  இந்தப் பாத யாத்திரையில் உலக சைவத் திருச் சபையின் இலங்கைக்கான தலைவர் சைவப்புலவர் சி.சுமூகலிங்கம், சைவப்புலவர் கந்த சத்தியதாசன், கதிர்காமம் பாத யாத்திரைக் குழுவின் தலைவர் வேல்சாமி ஐயா, சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த விழிப்புலனற்ற சிறுவர்கள், அடியவர்கள் எனப் பலரும் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டுள்ளனர்.  

இந்தப் பாத யாத்திரை யாழ்.பூநகரி- மன்னார் பிரதான வீதியூடாக  மகாசிவராத்திரி தினமான எதிர்வரும்-24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கேதீஸ்வரம் ஆலயத்தைச் சென்றடையவுள்ளதாக உலக சைவத் திருச்சபையின் இலங்கைக்கான தலைவர் சைவப்புலவர் சி.சுமூகலிங்கம் தெரிவித்தார். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment