//]]>

Thursday, June 8, 2017

திருமுருகன் காந்தி கைதுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம் (Photos)


ஈழத்தமிழர்களுக்காக தொடர்ச்சியாகப் போராடி வரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்களின் விடுதலையை வலியுறுத்தி இன்று காலை 10.00 மணியளவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மத்தியப் பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

'தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி'யின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 'ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி'யின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், 'தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி'யின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்  தமிழக அரசைக் கண்டித்து பல்வேறு பதாகைகளை ஏந்தியபடி, திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்களின் விடுதலைக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

'ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு குண்டர் சட்டமா? காந்தியதேசமே காந்தியவாதியை சிறையில் அடைப்பதா? தமிழக அரசே ஈழ உணர்வாளர்களை விடுதலை செய்' என்பது உள்ளிட்ட கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் பேசும்போது, 

''ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காகவும், நீதிக்காகவும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட ஈழ ஆதரவு செயற்பாட்டாளர்கள் போராடிவருகிறார்கள். இதன் ஒருபகுதியாக கடந்த மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தமிழக மெரினா கடற்கரையில் நிகழ்த்தினர். அப்போது, அவர்களைக் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு. இது ஈழத்தமிழர்களாகிய எங்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதானவர்களை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊடாக ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவழிப்பை தொடர்ச்சியாக நினைவுபடுத்துவதோடு, ஈழத்தமிழர்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். ஆனால், இவ்வாறான நினைவேந்தல்களை, தமிழக அரசைக் கொண்டு இந்திய மத்திய அரசு கட்டுப்படுத்துவதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது. இந்த நடவடிக்கையானது ஈழத்தமிழ் மக்களுக்காகத் துடிக்கும் தொப்புள் கொடி உறவுகளான தாய்த் தமிழக மக்களின் உணர்வுகளை மிதிக்கும் செயலாகவே நாங்கள் பார்க்கிறோம். இது ஈழத்தமிழ் மக்கள் மீதான இந்திய மத்திய அரசின் விரோதப் போக்கையே காட்டுகிறது.

வல்லரசு நாடுகள் ஐ.நா-வில், இலங்கையின் பெயரால் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி தமிழ் மக்களுக்காக செயற்படுவதாக காட்டிக்கொள்கிறது. ஆனால், அது முழுக்க முழுக்க 'இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அழுத்தக் கருவி மட்டும் தான்' என்கிற விடயத்தை மிகத் துணிச்சலாக ஐ.நா-வில் அம்பலப்படுத்தியவர் திருமுருகன் காந்தி. சர்வதேச தீர்ப்பாயமொன்றின் ஊடாக ஈழத்தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் இனவழிப்பு விசாரணையை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்கவேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருப்பவர்'' என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்துத் தெரிவிக்கையில், 

வல்லரசு நாடுகள் இணைந்து ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் ஈழத்தமிழர்களை ஏமாற்றிப் பொறுப்புக் கூறலை உள்ளக விசாரணைக்கள் முடக்கியிருக்கும் சூழலில்  திருமுருகன் காந்தி அதற்கெதிராகப் பல்வேறு மட்டங்களில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார். தமிழ் மக்களுக்கான நீதியான பொறுப்புக் கூறலுமில்லாமல், அரசியல் தீர்வுமில்லாமல் நடுத் தெருவில் நிற்பதற்கு திருமுருகன் காந்தி போன்ற ஆழமான தமிழுணர்வை வெளிப்படுத்தி வருபவர்களின் கருத்துக்களைச் செவிமடுக்காமையே பிரதான காரணமாகும்.

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மே-17 இயக்கத்தின் பங்களிப்பு என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய விடயம். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை துணிச்சலுடன் வெளிக்கொணர்ந்ததுடன், இனப்படுகொலையையும் அம்பலப்படுத்தும் வகையிலும் செயற்பட்ட மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் இனப்படுகொலை நாளை நினைவு கூர்ந்தமைக்காகத் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. திருமுருகன் காந்தி தமிழக அரசால் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.

அவரது கைதைக் கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஏனைய தரப்புக்களுடன் இணைந்து அடையாளக் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளது. திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்படும் வரை எங்கள் போராட்டம் ஓயாது தொடரும் என்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment