சிறுநீரக நோய் தற்போது முக்கிய ஆட்கொல்லி நோயாக உருவெடுத்துள்ளது. எங்களுடைய வைத்தியசாலையில் தினசரி ஒன்பது நோயாளர்களுக்கு ஒரே தடவையில் சிறுநீரக சுத்தீகரிப்பு இடம்பெறும். நேற்றைய தினம் சுத்திகரிப்பு நடவடிக்கையின் போது திடீரென சுத்தீகரிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மோட்டார் இயந்திரம் பழுதடைந்து விட்டது. சிறுநீரக நோய்த் தாக்கத்திற்கு இலக்கானவர்களின் வயிறு வீங்கியிருக்கும். சுவாசிக்க ஏற்படுகின்ற சிரமம் காரணமாக மூக்கில் கருவி பொருத்தப்பட்டிருக்கும்.
குறித்த சுத்தீகரிப்புப் பணி திடீரென நிறுத்தப்பட்டமை காரணமாக பல நோயாளர்கள் அங்கிருந்து நேரடியாக என்னுடைய அலுவலகத்திற்கு வருகை தந்து இந்த இயந்திரத்தை உடனடியாக இயக்கச் செய்யுங்கள். இல்லாவிடில், இன்னும் சில மணி நேரத்தில் எங்களுடைய உயிர் போய் விடும் எனத் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறிய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி எமது வைத்தியசாலையில் சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதற்குப் பல்வேறு வசதிகளைச் செய்ய வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.
யாழ். நல்லூர் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுநீரக நோயாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றுப் புதன்கிழமை( 15) நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நல்லூர் பிரதேச செயலர் ஆழ்வார்பிள்ளை சிறி தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடுமையான இரத்த அழுத்த நோய்த் தாக்கத்திற்கு இலக்கான ஒருவர் உரிய மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டு தேவையான மருந்துகளை உட்கொள்ளாதிருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் அவரது சிறுநீரகம் பழுதடைந்து விடும். சிறுநீரகம் பழுதடைய ஆரம்பித்து ஒரு கட்டத்தைத் தாண்டி விட்டால் முற்றுமுழுதான செயலிழப்பைத் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும்.
இதே போன்று தான் நீரிழிவுத் தாக்கம் ஏற்பட்டுள்ள ஒருவர் அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்பாட்டிற்கு ள் கொண்டு வராது விடில் சிறுநீரகம் செயலிழக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படலாம். ஆகவே, இரத்த அழுத்தம் உள்ளவர்களும், நீரிழிவு நோயுள்ளவர்களும் தமக்கு ஏற்பட்டுள்ள நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தொடர்ச் சியான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் சிறுநீரக நோய் தாக்காதவாறு தடுத்து நிறுத்த முடியும்.
சிறுநீரக நோயின் கடுமையான நோய்த் தாக்கங்களுக்கு உட்படும் ஒருவர் அசாதாரண தோற்றமுடையவராக மாறுவதுடன் அவரிடம் காணப்படும் பல்வேறு திறன்களும் மங்கிப் போகும் அபாயமும் உருவாகும். சிறுநீரக மாற்றுச் சிகிச்சையை மேற்கொண்ட ஒருவர் மிகக் கவனமாகவே தனது எஞ்சியுள்ள வாழ்நாட் காலத்தைக் கழிக்க வேண்டும்.
சிறுநீர் நோயை வருமுன்னே காப்பதற்கான வழிமுறையை அரசாங்க உத்தியோகத்தர்கள் சமூகத்தின் அனைத்து மட்டங்களிற்கும் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment