//]]>

Friday, March 17, 2017

வடக்குமக்களின் வாழ்வாதாரமேம்பாட்டுக்கு நோர்வே அனுசரணையுடன் புதியதிட்டம்



வடக்குமக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை மீள்நல்லிணக்கத்தின் ஊடாக ஏற்படுத்தல் என்ற புதிய கருத்திட்டம் நோர்வேநாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை (15.03.2017) வவுனியாவில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்திட்டத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

தொழில் முயற்சியில் வடக்கைத் தெற்குடன் இணைக்கும் மீள்நல்லிணக்கத்தின் ஊடாக வடமாகாணத்தில் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் வழங்குதல் (Employment Generation and Livelyhoods through Reconsilation – EGLR) என்ற இப்புதிய கருத்திட்டம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

பழச்செய்கை, மரக்கறிச்செய்கை, மற்றும் மீன்பிடிசார்ந்த உற்பத்திகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்துக்கென நோர்வே 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாக வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வவுனியா வடக்கு பழச்செய்கையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்குப் பழம் பொதியிடல் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு சந்நாசி பரந்தனில் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக நாட்டிவைத்துள்ளார். நான்கு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இப்பொதியிடல் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் யாவும் நான்கு மாதங்களில் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் நட் நைபுளோற், வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், சர்வதேசதொழிலாளர் அமைப்பின் திட்ட இயக்குநர் நிகால் தேவகிரி, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கு.ரவீந்திரநாதன், பிரதிவிவசாயப் பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் ஆகியோரும் பப்பாசிச் செய்கையாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment