வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர வேலை வாய்ப்புப் பெற்றுத் தருமாறு வலியுறுத்திக் கடந்த தி ங்கட்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற போராட்டம் ஐந்தாவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை(03) தீர்வு ஏதுமின்றி முன்னெடுக்கப்படும் நிலையில் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
தற்போது யாழ்.குடாநாட்டில் கடும் மழை பெய்து வரும் நிலையிலும் தொடர்ந்தும் போராட்டம் இடம்பெறுகிறது. அத்துடன் வீதியிலேயே சமைத்து, வீதியிலேயே உண்ணும் அவல நிலையும் தொடர்கிறது.
இன்றைய தினம் வடமாகாணத்தின் மன்னார், வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் பலரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்த்தனர் . யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்கள் தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். அத்துடன் அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பேச்சாளர் கலந்து கொண்டு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்குப் பூரண ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பட்டதாரிகளை இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன் இன்று மதியம் ஈ.பி.டி.பி கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு பட்டதாரிகளின் போராட்டத்துக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான முழு விபரங்களையும் திரட்டும் வகையில் போராட்டம் இடம்பெற்று வரும் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகப் பதிவு நடவடிக்கை ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இதுவரை 1500 இற்கும் பட்டதாரிகள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் குறித்த போராட்டத்தில் சுமார்-50 வரையான வேலையற்ற பெண் பட்டதாரிகள் இரவு வேளையிலும் கலந்து கொண்டுள்ளனர்.
தமக்கான தீர்வு கோரிப் பல்வேறு பதாதைகளைப் போராட்டக் களத்தில் காட்சிப்படுத்தியுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடிகளையும் பறக்க விட்டுள்ளனர்.
நாங்கள் வீதிப் போக்குவரத்துக்கோ அல்லது யாழ்.மாவட்டச் செயலகத்தில் அன்றாடம் இடம்பெறும் கடமைகளுக்கோ எந்தவித இடையூறுமில்லாமல் அமைதி வழியிலும், நியாயமான முறையிலும் போராடி வருகிறோம். எங்களது போராட்டத்தைப் பார்வையிட வருகை தரும் பாராளுமன்ற உறுப்பினர்களும், வடமாகாண சபை உறுப்பினர்களும் தீர்வு பெற்றுத் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகள் வழங்கி மீண்டும் மீண்டும் எங்களை ஏமாற்றி வருகின்றனர் . எங்களுடைய கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் எதுவும் வழங்காமல் மீண்டும் மீண்டும் பொய்யான வாக்குறுதிகள் மூலம் பழைய புராணத்தையே பாடிக் கொண்டிருப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் கேட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment