கடந்த-2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று செவ்வாய்க்கிழமை(28) வெளியாகியிருந்தது. இந்தப் பெறுபேற்றின் அடிப்படையில் யாழ். அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தின் கடந்த-130 ஆண்டு கால வரலாற்றில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற் றிய 23 மாணவர்களில் அனைத்து மாணவர்களும் சித்தி பெற்று வரலாற்றுச்சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பாக 18 மாணவர்கள் கணித பாடத்தில் A தரச் சித்தியையும், இரு மாணவர்கள் B தரச் சித்தியையும், மூன்று மாணவர்கள் C தரச் சித்தியையும் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்திற்கு செவ்வாய்க்கிழமை(28) முற்பகல்- 10 மணியளவில் நேரில் விஜயம் செய்த வடமாகாணசபை உறுப்பினரும், மேற்படி பாடசாலையின் முன்னாள் ஆசிரியருமான பா.கஜதீபன் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், சித்தியடைந்த மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.
வாழ்த்துக்கள் தெரிவித்த பின்னர் வடமாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் கருத்துத் தெரிவிக்கையில்,
தீவக வலயத்தைப்பொறுத்தவரை குறிப்பாக கடல் கடந்த தீவுகளிலுள்ள அதி கஷ்டப் பாடசாலையாகவுள்ள இப் பாடசாலையின் கடந்த- 130 ஆண்டு கால வரலாற்றில் இவ்வாறான ஓர் வரலாற்றுச்சாதனையான பெறுபேறுகளைப்பெற்றுள்ளமையானது மிகுந்த பாராட்டுக்குரிய விடயமாகும். இது மிகப்பெரிய ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக கடல் கடந்த தீவுகளிலுள்ள அதி கஷ்டப் பாடசாலியாகவுள்ள இப்பாடசாலையில் வசதிவாய்ப்புகள் மிக்க, செல்வம் படைத்தோர் மற்றும் ஒருகாலத்தில் கல்வியறிவில் ஓங்கியிருந்தோர் ஆகிய அனைத்துத்தரப்பினரும் இம்மண்ணை விட்டு பல்வேறு காரணங்களினால் வெளியேறியுள்ள சூழ்நிலையில் இந்த வரலாற்றுச் சாதனை நிகழ்ந்துள்ளது.
அர்ப்பணிப்பு மிக்க ஆசிரிய சமூகம் நினைத்தால் எவ்வாறான கல்வியியல் மாற்றங்களையும் ஏற்படுத்திட முடியும் என்பதற்கு ஒரு நடைமுறை உதாரணமாக நான் இந்தப் பெறுபேற்றை நோக்குகின்றேன். ஏனெனில், ஆசிரியர்கள் இவ்வாறான அதிகஷ்டப்பிரதேசத்தில், மிகக்குறைந்த வளங்களுடன் தங்களுடைய முயற்சி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு இவ்வாறான உச்ச அடைவு ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் சித்தியெய்திய மாணவர்கள், மாணவர்களின் சித்திக்காக உழைத்திட்ட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ஆகியோ ரை நான் இத்தருணத்தில் பாராட்டி வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகின்றேன் என்றார்.
0 comments:
Post a Comment