//]]>

Wednesday, June 7, 2017

வடமாகாணசபையின் முன்னுதாரணமான செயற்பாட்டிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் வரவேற்பு


தமது ஆட்சியில் ஊழலை முற்றாக ஒழித்து ஊழல் வாதிகளுக்கு தண்டனை வழங்குவதாக கூறி நல்லாட்சி வேடம் அணிந்து ஆட்சிப் பீடமேறிய அரசாங்கமே ஊழல்வாதிகளைக் காப்பாற்றும் வகையில் செயற்பட்டு வரும் நிலையில் வடமாகாண அமைச்சர்கள் தொடர்பாக ஊழல் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடு வந்தவேளை அதனை விசாரணைக்குட்படுத்திக் குற்றங்களை கண்டறிந்த வடமாகாணசபையின் முன்னுதாரணமான செயற்பாட்டை இலங்கை ஆசிரியர்சங்கம் வரவேற்றுள்ளது.

 இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இன்று வியாழக்கிழமை(08) விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

 அன்றும் இன்றும் வடமாகாண மக்கள் கல்விமேல் அக்கறை கொண்டவர்கள். கொடூரமான யுத்த சூழ்நிலைகளில் கூட வடக்கு மக்கள் கல்வியின் முக்கியத்துவம் பேணிவந்துள்ளனர். இந்த நிலையில் வடக்கில் தற்போதைய கல்வியின் பின்தங்கிய நிலைக்கு வடமாகாண கல்வியமைச்சின் முறைகேடுகளே காரணம் என நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறிவந்த நிலையில் தற்போது விசாரணையில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

வடமாகாண சபையின் அமைச்சுக்கள் தொடர்பாகத் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்த நிலையில் மூவரடங்கிய விசாரணைக்குழுவை நியமித்து விசாரணைக்குட்படுத்திய வடமாகாண சபையினை நாம் பாராட்டுகின்றோம். இவ்விடயம் சார்பாக வடமாகாணக் கல்வியமைச்சின் முறைகேடுகளும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் வடமாகாணக் கல்வியமைச்சின் பல முறைகேடுகள் எமது சங்கத்தாலும் பல தடவைகள் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளன. எனவே, வடமாகாணத்தின் கல்வியினைப் பாதுகாக்கும் நோக்கில் வடமாகாண சபை செயற்படுவது அவசியமானது.

 வடமாகாண அமைச்சர்கள் தொடர்பான விசாரணைக் குழுவின் பரிந்துரையை வடமாகாணசபை உடனடியாக அமுல்படுத்தவேண்டும். இதுவே வடமாகாணசபையின் நீதியான ஆட்சித்தத்துவத்தை நிலைநாட்டும் செயற்பாடாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment