கண்டி மலையகக் கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்தின தீபம் விருது வழங்கும் விழா நேற்று சனிக்கிழமை(09) பிற்பகல்-02 மணி முதல் யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் சங்கத் தலைவர் நா. தனேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த விழாவில் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் பிரதம அதிதியாகவும், யாழ். பல்கலைக்கழக முன்னாள் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் சு. தேவராஜா, உள்ளூர், சர்வதேச திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர் தேசாபிமானி விஷ்வகலா கீர்த்தி வைரமுத்து வாமதேவன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும், தேசாபிமானி விஷ்வகீர்த்தி லயன்ஸ் எஸ். சதீஸ்குமார்(ஜே.பி), அகில இலங்கை சமாதான நீதவான் கலாபூஷணம் எம். டி. எ. கபூர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறித்த விழாவின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பல்துறை சார்ந்த சாதனையாளர்கள் 'தேசாபிமானி' விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவிகளின் குழுநடனம் இடம்பெற்றது. குறித்த குழுநடனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. குழுநடனத்தில் பங்கேற்ற மாணவிகள் மற்றும் விருந்தினர்கள் வரவேற்பு விழாவில் பாண்ட் வாத்திய அணிவகுப்பில் பங்கேற்ற யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை சிறார்கள் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விழாவில் பெருமளவான பல்துறை சார்ந்த கலைஞர்கள், சமூக சேவையாளர்கள், மாணவ மாணவிகள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மலையக மக்களின் கலை, கலாசார விழுமியங்களைக் கட்டிக் காக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கண்டி மலையகக் கலாசார சங்கம் 22 ஆவது விருது வழங்கும் விழாவை இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளது. கண்டி மலையகக் கலாசார சங்கம் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்துறை சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கிக் கெளரவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment