//]]>

Monday, June 12, 2017

யாழ். மாவட்டத்தில் மாற்று வலுவுள்ளோர்களின் தொகை அதிகரிப்பு!- கருவியின் ஆண்டு நிறைவு விழாவில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் (Photos)


யாழ். மாவட்டத்தில் வலுவுள்ளோர்கள் தொகை அதிகரித்துச் செல்கிறது. போரினால் வலுவிழந்தவர்கள், இயற்கையால் வலுவிழந்தவர்கள், விபத்துக்கள் காரணமாக வலுவிழந்தவர்கள் போன்றோர் எம்மத்தியில் காணப்படுகின்றனர் எனத் தெரிவித்தார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்கினேஸ்வரன்.

கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையத்தின் நான்காவது ஆண்டு நிறைவு விழா நேற்று  ஞாயிற்றுக்கிழமை(11) காலை-09.30 மணி முதல் யாழ். நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் கருவி மாற்றுத் திறனாளிகள் சமூக வள நிலையத்தின் தலைவர் க. தர்மசேகரம் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான வலுவிழந்தவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்பதற்காக அவர்களைப் பராமரிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது அவர்களது ஆற்றலை அறிந்து அதற்கேற்ற பயிற்சிகளைக் கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையம் வழங்கி வருகின்றமை பாராட்டுதற்குரியது.

மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக நாமிருக்க வேண்டும்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகச் சமூகத்தினருடன் கலந்துரையாடலொன்றை நடாத்துவதற்கு முன்வருமாறு கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூக வள நிலையத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  அவரது வேண்டுகோளை ஏற்று சந்திப்பொன்றினை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதற்கு நான் தயாராகவிருக்கின்றேன். மற்றும் வேறு பல உதவிகளையும் எமது பல்கலைக்கழகம் ஊடாகப் பெற்றுக் கொடுப்பதற்கு என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

விருந்தினர்கள் உரையைத் தொடர்ந்து கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் 'வலு' சஞ்சிகையின் 14 ஆவது  இதழ் பிரதம விருந்தினரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. சஞ்சிகையின் முதற்பிரதியை சமூக சேவகர் சி. ஞானசேகரம் பெற்றுக் கொண்டார்.

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த தமிழ் பிறாங்கோ சங்கத்தினால் 25 மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாகத் தலா-2000 ரூபா வீதம் கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டதுடன், கருவி மாற்றுத்திறனாளிகளின் உபதலைவர் தி. திருமாறனின் நிதிப்பங்களிப்பில் ஐந்து மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கும் கல்வி ஊக்குவிப்பு நிதியுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அது மாத்திரமன்றி யாழ்ப்பாணத்திலிருந்து  புலம்பெயர்ந்து வாழும் திருமதி- மகேஸ்வரி இரத்தினசபாபதி என்பவரின் 80 ஆவது அகவையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளின் 25 பிள்ளைகளின் கல்வி ஊக்குவிப்புக்காகத் தலா-2000 ரூபா வீதம் வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment