யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பெருமளவு மருத்துவக் கழிவுகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(11) இரவோடிரவாக யாழ். வலி கிழக்குப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட செம்மணி வயல் வெளியில் உழவியந்திரத்தில் எடுத்து வரப்பட்டுக் கொட்டப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில் பெரும் சூழல் மாசடைவும், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினமிரவு -09 மணியளவில் உழவியந்திரத்தில் கழிவுகளுடன் வந்த சிலர் செம்மணியிலுள்ள வயல்வெளியில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
ஏற்கனவே நான்கு தடவைகள் மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் மறுபடியும் உழவியந்திரத்தில் கழிவுகளைக் கொண்டு வந்து செம்மணி உப்பளம் பகுதியிலுள்ள வயல் வெளியில் கொட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை அப்பகுதிப் பொதுமக்களும், இளைஞர்களும் இணைந்து தடுத்து நிறுத்தினர். உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்ற சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவுகள் தான் இவையென ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில் குறித்த உழவியந்திரம் வயல் வெளியில் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த உழவியந்திரம் அங்கிருந்து சென்றதையடுத்து மீண்டுமொரு உழவியந்திரம் கழிவுகளுடன் செம்மணி வயல் வெளியை நோக்கி வந்துள்ளது. இந்த நிலையில் குறித்த உழவியந்திரத்தைத் தடுத்து நிறுத்திய அப்பகுதிப் பொதுமக்களும், இளைஞர்களும் தடுத்து நிறுத்திக் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து உழவியந்திரத்தில் கழிவுகளை ஏற்றி வந்த சாரதியிடம் ஒரு தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுத் தொடர்பு கொண்டனர். இதனையடுத்து அப்பகுதிக்கு நான்கு பேர் அம்புலன்ஸ் வாகனத்தில் வருகை தந்தனர். அதில் ஒரு பொதுச்சுகாதாரப் பரிசோதகரும் அடங்கியிருந்தார். குறித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தனக்குத் தெரியாமல் தான் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நீங்கள் இந்தவிடத்தில் கழிவுகள் கொட்டுவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மீண்டும் கழிவுகளை இந்தவிடத்திலிருந்து ஏற்றிச் செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அம்புலன்ஸில் இருந்த பல லீற்றர் கொள்ளளவுள்ள டீசலைக் காட்டி குறித்த கழிவுகளைத் தாங்கள் தீமூட்டிச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த செயற்பாட்டிற்கு அப்பகுதிப் பொதுமக்களும், இளைஞர்களும் இணைந்து கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இதனையடுத்துக் குறித்த பகுதியில் கொண்டு வந்து கொட்டப்பட்ட அனைத்துக் கழிவுகளையும் மீண்டும் ஏற்றிச் செல்வதற்கு உடன்பட்டு இரவு-11 மணியளவில் அங்கிருந்து சென்றுள்ளனர்.
எனினும், இன்று அதிகாலை மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் குறித்த கழிவுகளைத் தீமூட்டிக் கொளுத்திவிட்டுச் சென்றுள்ளனர். புண் சீலைகள், பிளாஸ்ரர் கழிவுகள், குளுக்கோசுப் பைகள், ஊசிகள், பெண்களின் மகப்பேற்றுக் கழிவுகள், பொலித்தீன் பைகள், போத்தல்கள் போன்ற பல்வேறு கழிவுகள் இவற்றுள் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கழிவுகளில் பல கழிவுகள் அரைகுறையாக எரிந்தநிலையிலும், எரியாத நிலையிலும் அப்பகுதியின் பலவிடங்களிலும் பரவிய நிலையில் காணப்படுகின்றன. குறித்த கழிவுகள் தற்போது வரை எரிந்த நிலையிலையே காணப்படுகின்றன. இதனால் குறித்த பகுதியில் பெரும் சூழல் மாசடைவும், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
குறித்த கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதி கடந்த பல வருடங்களுக்கு முன்னர் உப்பளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது மாரி காலத்தைத் தொடர்ந்து சில மாதங்கள் வரை குறித்த பகுதியில் அதிகளவு நீர் தேங்கிக் காணப்படுவதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், வெளியிடங்களைச் சேர்ந்தவர்களும் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், அதனை அண்டியுள்ள பகுதிகளில் வயல் பயிர் செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அது மாத்திரமன்றிக் குறித்த பகுதியில் வடமாகாண சபை நன்னீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த செயற்பாடு தொடர்பில் கடும் விசனம் தெரிவித்துள்ள அப்பகுதிப் பொதுமக்கள் வைத்தியசாலை நிர்வாகத்தின் பூரண ஒத்துழைப்புடனேயே இந்தச் செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவும் கடுமையாகச் சாடியுள்ளனர். வடமாகாணத்திலேயே முதன்மையான வைத்தியசாலையாகக் காணப்படும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சுகாதார விடயத்தில் வடக்கிலுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டிய நிலையில் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் செயற்படுவது முறையோ? எனக் கேள்வியெழுப்பியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த செயற்பாட்டை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகம் மூடி மறைக்க முற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த செயற்பாடு தொடர்பில் பொலிஸாருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ தகவல் வழங்க வேண்டாமென அதிகாரத் தொனியில் குறித்த செயற்பாட்டைத் தடுத்து நிறுத்த முன்னின்ற சிலர் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் செம்மணி வயல் வெளியில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளமை தொடர்பாகக் குறித்த பகுதி மக்களால் வலி. கிழக்குப் பிரதேச சபையின் செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதி கிடைக்குமா???
0 comments:
Post a Comment