யாழ். செம்மணியில் இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி குமாரசாமியின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று வியாழக்கிழமை(07) காலை யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட் டுள்ளது.
செம்மணியிலுள்ள கிரிஷாந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அனுஷ்டிக்கப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வில் கிருஷாந்தி உட்படப் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மூவருக்கும் ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராஜா முன்னாள் வடமாகாண சபை வேட்பாளர் மு.தம்பிராஜா, படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பாடசாலை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி ஞாபகார்த்தமாக வறுமைக்கோட்டுக்குட்பட்ட 21 பாடசாலை மாணவ, மாணவிகளுக்குத் துவிச்சக்கர வண்டிகளும், 63 மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த கிருஷாந்தி குமாரசாமி 1996 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம்-07 ஆம் திகதி கல்லூரிக்குச் சென்று விட்டு வீடு திரும்பும் வேளையில் இராணுவத்தினரால் செம்மணி காவலரனில் தடுத்து நிறுத்தப்பட்டுக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு ப் படுகொலை செய்யப்பட்டார்.
ஆதாரங்கள் வெளியாவதைத் தடுப்பதற்காக கிருஷாந்தியைத் தேடிச் சென்ற கிருஷாந்தியின் தாயார் குமாரசாமி இராசம்மாள், சகோதரரான குமாரசாமி பிரணவன், குடும்ப நண்பரான கிருபாமூர்த்தி ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர். குறித்த நால்வரும் காணாமற் போய் 45 நாட்கள் கடந்த நிலையில் செம்மணியிலுள்ள புதைகுழியொன்றிலிருந்து புதைக்கப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment