வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் பிளாஸ்டிக் பைகளைப்போல் மிதந்து மிதந்து வந்து கரை ஒதுங்கின அந்தச் சடலங்கள். இழுத்துப்போட்டபிறகே எண்ணிப் பார்த்தார்கள்; பதினைந்து பெண்கள், பதினோரு குழந்தைகள். இது நடந்தது பங்களாதேஷில் உள்ள காக்ஸ் பஜார் என்னும் நகரில் உள்ள கடற்கரையில். `எங்களுக்குக் கிடைத்தவற்றை மட்டுமே மீட்டிருக்கிறோம், கடலிலே கலந்து தொலைந்துவிட்டவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை’ என்கிறார்கள் கரையோரம் பணிபுரியும் மக்கள். வருத்தத்தைக் காட்டிலும் அவர்கள் குரலில் அதிகம் தட்டுப்படுவது வெறுப்பே. காரணம், இப்படி மனிதர்கள் மிதந்துவருவது அங்கே கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வாகிவிட்டது.
மிகச் சரியாக பங்களாதேஷுக்கும் பர்மாவுக்கும் நடுவில் இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையைப்போல் அமைந்திருக்கிறது நஃப் ஆறு. ரோஹிங்கியா மக்களைப் பொறுத்தவரை இது வெறும் ஆறு மட்டுமல்ல, மரணத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பாலம். அதில் ஏறிவிட்டால், பர்மாவிலிருந்து விடுபட்டு பங்களாதேஷை அடைந்துவிட முடியும். ஆனால், அத்தனை எளிதானதல்ல இந்த மார்க்கம். கள்ளத்தனமாகத்தான் சென்றாக வேண்டும். கையில் அதிகக் காசில்லை என்பதால், சிறு கப்பல்களைத்தான் அமர்த்திக்கொள்ள முடியும். ஆட்டுமந்தைகளைப்போலத்தான் நெருக்கியடித்து அமர்ந்துகொள்ள முடியும். எப்போது வேண்டுமானாலும் நடுக்கடலில் கப்பல் கவிழலாம்; கடந்த புதனன்று நடந்ததைப் போல். அல்லது எப்போது வேண்டுமானாலும் பங்களாதேஷ் அதிகாரிகளிடம் பிடிபடலாம். கப்பலும் கவிழாமல் ஒருவரிடமும் மாட்டாமல் இருந்தாலும் மரணம் சாத்தியம்தான். செல்லும் வழியிலேயே பசி, குளிர், நோய் என்று பல காரணங்களால் கப்பலிலேயே சுருண்டு மாண்டிருக்கிறார்கள் பலர்.
இருந்தும் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கடல் வழியாகவும் நிலம் வழியாகவும் தினம் தினம் பர்மாவிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆபத்து என்று தெரிந்தேதான் அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். காரணம் ஒன்றுதான். பர்மாவில் தங்கியிருப்பது என்பது இதைக் காட்டிலும் மோசமானது. அந்த வகையில் தப்பித்தல் என்பது அவர்கள் முன்னிருக்கும் ஒரு வாய்ப்பல்ல, அது ஒன்றுதான் உயிர்த்திருப்பதற்கான ஒரே வழி.
ஐ.நா-வின் புலம் பெயர்வோருக்கான அமைப்பு (இன்டர்நேஷனல் ஆர்கனைசேஷன் ஆஃப் மைக்ரேஷன்) அளிக்கும் புள்ளி விவரங்களின்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18,500 ரோஹிங்கியா முஸ்லிம்கள் பர்மாவிலிருந்து அகதிகளாக வெளியேறி பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளனர். எல்லையைத் தாண்ட முடியாமல் பங்களாதேஷுக்கு மிக அருகில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லையில் இருக்கும் வங்கதேசத்து வீரர்கள் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு ஒரு விநாடி கண்களை மூடிக்கொண்டாலும், அவர்கள் அத்தனை பேரும் உள் நுழைந்து விடுவார்கள்.
பங்களாதேஷை ஆண்டுவரும் ஷேக் ஹசீனாவின் பயம் இதுதான். ரோஹிங்கியா என்றாலே அவர் குரலில் கோபமும், வெறுப்பும், சலிப்பும் கலந்துவிடுகின்றன. ‘ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகளை நாங்கள் எங்கள் நாட்டுக்குள் அனுமதித்து விட்டோம். மனிதத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கருதியே இந்த உதவியை நாங்கள் செய்தோம். ஆனால், இப்போது அதுவே பிரச்னையாகிவிட்டது’ என்கிறார். அமெரிக்கா இதில் தலையிட வேண்டும் என்பது ஹசீனாவின் விருப்பம். பர்மாவுக்கு அழுத்தம் கொடுத்து எப்படியாவது ரோஹிங்கி யாக்களை அவர்களுடைய எல்லை களுக்கு உள்ளேயே தடுத்துநிறுத்த உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பங்களாதேஷில் உள்ளவர்களின் பெரும்பான்மை கருத்தும் இதுவேதான். `நாங்களே ஆயிரத்தெட்டுப் பிரச்னைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது எதற்கு அலையலையாக அகதிகளை அனுமதிக்க வேண்டும்? எப்போதாவது சிலர் என்றால் பாதகமில்லை; இதுவே ஒரு வழக்கமாகிவிடுவதை அனுமதிக்கக் கூடாது அல்லவா? பங்களாதேஷ் என்ன அமெரிக்காவா, ஐரோப்பாவா? அவர்களே பார்த்துப் பார்த்துதான் அகதிகளைச் சேர்த்துக்கொள்கிறார்கள் என்னும்போது நாம் மட்டும் கதவுகளை அகலமாகத் திறந்துவைத்துக்கொண்டு உள்ளேவரும் எல்லோரையும் வரவேற்று மகிழ வேண்டுமா?’ என்பது பங்களாதேஷின் குரல்.
ரோஹிங்கியாக்கள் பர்மாவிலிருந்து துரத்தப்படுவது இது முதன்முறையல்ல. மிக மோசமான முறையில் நடத்தப்படுவதும் கொல்லப்படுவதும்கூட புதிதல்ல. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக நீண்டுவரும் திட்டமிட்ட தாக்குதலின் ஒரு பகுதிதான் கடந்த மாத இறுதியில் பர்மாவின் மேற்குப் பகுதியில் மூண்ட ஒரு மதக்கலவரத்தில் 89 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிரிட்டனில் இருந்து செயல்படும் ரோஹிங்கியாக்களுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றின் கணிப்பின்படி சமீபத்தில் மட்டும் ஆயிரம் பேர் இத்தகைய கலவரங்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியாக்களின் குடியிருப்புகள் கொளுத்தப் பட்டிருக்கின்றன. உடைமைகள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன அல்லது முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கலவரமும் ஒவ்வொரு தாக்குதலும் ரோஹிங்கியா முஸ்லிம்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதால், அவர்கள் உயிருக்குப் பயந்து எல்லாவற்றையும் போட்டது போட்டபடி பர்மாவிலிருந்து தப்பியோடுகிறார்கள். பர்மியர்கள் விரும்புவதும் இதைத்தான். ‘இது எங்கள் நாடு. இனி இங்கே வராதே’ என்கிறார்கள் அவர்கள்.
பங்களாதேஷ் மறுப்புச் சொல்வதற்குக் காரணம் ரோஹிங்கியாக்கள் அவர்களைப் பொறுத்தவரை அந்நியர்கள். ஆனால், அவர்களுடைய வாழ்விடமான பர்மாவும் இதையே சொல்கிறது என்றால், குழப்பமாக அல்லவா இருக்கிறது? ரோஹிங்கியாக்களின் உண்மையான தாய்வீடுதான் எது? எதனால் அவர்கள் பர்மாவிலிருந்து திட்டமிட்டுத் துரத்தப்படுகிறார்கள்? முக்கியமாக, ரோஹிங்கியாக்கள் எதனைத் தங்கள் தாய்நாடாகக் கருதுகிறார்கள்? பங்களாதேஷுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு?
பர்மா பெரும்பான்மை பௌத்தர்களைக் கொண்ட ஒரு நாடு என்பது அனைவருக்கும் தெரியும். பௌத்தர்கள் பற்றி நமக்கெல்லாம் ஒரு பிம்பம் இருக்கும். காவி உடை தரித்து, அமைதியே உருவாய், புழு பூச்சிக்கும் தீங்கு விளைவிக்காமல், தர்மத்தை மதித்து, புத்தரின் உபதேசங்களைப் போற்றி, பரப்பி வாழும் சாதுவான ஒரு மக்கள் கூட்டம் என்றே நினைத்துக்கொள்வோம். ஆனால், ரோஹிங்கியாக்களைத் தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக ஏற்க மறுப்பவர்களில் முதலிடம் பெறுபவர்கள் இவர்கள்தாம்.
அதற்கான காரணம் என்ன? பர்மாவில் நூற்றுக்கும் அதிகமான இனக்குழுக்கள், மொழிகள், வட்டார வழக்குகள் ஆகியவை உள்ளன. இந்தியா, சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளின் சந்திப்புப் புள்ளியாக வரலாற்றுக் காலம் தொட்டு பர்மா இருந்து வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மக்கள் இடப்பெயர்ச்சிக் காரணமாக ஒருவிதக் கலாசாரப் பன்முகத்தன்மையை இந்நாடு பெற்றுள்ளது. அரசுத்தரப்பின்படி மொத்தம் 135 ‘தேசிய இனங்கள்’ பர்மாவில் உள்ளன. பர்மாவின் மொத்த மக்கள் தொகை 56 மில்லியன். இதில் மூன்றில் இரண்டுபங்கு பலத்துடன் இருக்கும் பெரும்பான்மையினர், பர்மியர்கள். குறிப்பிடத்தக்க சில சிறுபான்மையினரின் எண்ணிக்கை பின்வருமாறு : ஷான் (ஒன்பது சதவிகிதம்); கேரன் (ஏழு சதவிகிதம்); மோன், ராக்கின், சின், கச்சின், கரேனி, கயன், சீனர்கள், இந்தியர்கள், தானு, அகா, கோகாங், நாகா, பாலாங், ரோஹிங்கியா, தவோயான், வா ஆகியோரின் எண்ணிக்கை தலா ஐந்து சதவிகிதம் அல்லது அதைவிடக் குறைவு.
முஸ்லிம்களை எடுத்துக்கொண்டால் சன்னி முஸ்லிம்களே பெரும்பான்மையினர். எண்ணிக்கை, நான்கு சதவிகிதம். அவர்களில் பெரும்பாலானோர் ராக்கின் பகுதியிலும் கீழ்ப்புற பர்மாவிலும் வசிக்கின்றனர். வடக்கு ராக்கின் பகுதியில் வசிப்பவர்கள் ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களுடைய மொழியின் பெயரும் அதுவேதான். ரோஹிங்கியாவின் வேர் மொழி வங்காளம். பங்களாதேஷில் சிட்டகாங் வட்டார வழக்கின் சாயலை இது கொண்டிருக்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் வரையறைப்படி ரோஹிங்கியா என்பது மேற்கு பர்மாவில் உள்ள மத, மொழி சிறுபான்மைச் சமூகத்தைக் குறிக்கும் ஒரு பெயர். உலகில் அதிகம் ஒடுக்கப்படும் சிறுபான்மை குழுக்களில் இவர்கள் முதன்மையானவர்கள் என்கிறது ஐ.நா. மற்றபடி, ரோஹிங்கியா என்னும் சொல்லின் பொருள், அதன் ஆணிவேர், தொன்மம், வரலாறு ஆகியவை பற்றிப் பலவிதமான மாறுபட்டக் கோட்பாடுகள் நிலவி வருகின்றன.
பர்மாவில் உள்ள அரக்கான் பகுதியைச் சேர்ந்த (ராக்கின்) புத்திடாங், மவுங்டா ஆகிய நகர்ப்புறங்களில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். அரக்கான் என்பது பங்களாதேஷின் எல்லைப்புறத்தை ஒட்டி நாஃப் நதிக்கரை அருகில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒதுக்குப்புறமான இடம். 1784-ம் ஆண்டு இந்தப் பகுதியை பர்மா கைப்பற்றியது. அதற்கு முன்புவரை தனியொரு ஆட்சிப்பிரதேசமாக அரக்கான் இருந்து வந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தப் பிரதேசத்தில் தங்களுக்குத் தனியொரு இடம் இருந்தது வந்தது என்று ரோஹிங்கியா வரலாற்றாசிரியர்கள் வாதிடுகின்றனர். குறிப்பாகச் சொல்வதானால், கிபி 8-ம் நூற்றாண்டில் இருந்தே அரக்கானில் நாங்கள் வசித்து வந்திருக்கிறோம் என்கிறார்கள் அவர்கள். ஆனால், இதற்கு வரலாற்று ஆதாரமில்லை.
ரொம்பவும் பின்னோக்கிப் போகாமல் நவீன வரலாற்றுக் காலத்தோடு ஒட்டித்தான் ரோஹிங்கியாக்களை அணுக முடியும். பிரிட்டனின் ஆட்சியில் பர்மா இருந்தபோது, அரக்கான் பகுதியை விவசாயச் செழிப்பான பகுதியாக மாற்றுவதற்கு பிரிட்டனுக்கு வேலையாட்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப் பட்டார்கள். அதனால், பக்கத்து வங்காளத் திலிருந்து (இன்றைய பங்களாதேஷ்) அரக்கான் வருமாறு மக்களை காலனி அரசு ஊக்குவித்தது. இந்தியா, பர்மா இரண்டுமே தங்களுடைய காலனிகள் என்பதால் இரண்டுக்கும் இடையில் எல்லை எதையும் பிரிட்டிஷ் அரசு வைத்துக்கொள்ளவில்லை. இந்த இரு பிரதேசங்களுக்கும் இடையிலான மக்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும் அவர்கள் விரும்பவில்லை. உண்மையில் அதை அவர்கள் ஊக்குவிக்கவே செய்தனர். இந்தியா, பர்மா, இன்றைய பங்களாதேஷ் மூன்று நாடுகளிலும் மக்கள் பரிமாற்றங்களும் குடியேற்றங்களும் தடையின்றி நிகழ்ந்தன.
சிட்டகாங்கில் இருந்து ‘ஆயிரக்கணக்கான கூலிகள்’ நிலம் வழியாகவும் கடல் மார்க்கமாகவும் அரக்கான் பகுதிக்குக் குடிபெயர்ந்து வந்ததை பிரிட்டிஷ் ஆவணங்கள் பதிவு செய்துள்ளன. தாற்காலிக விவசாயக் கூலிகளாக முதலில் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அறுவடை முடிந்ததும் வந்த வழியே சொந்த ஊர் திரும்பிவிடுவார்கள். இவர்களுடைய தோராய எண்ணிக்கை ஐம்பதாயிரம். நாள்கள் செல்லச் செல்ல சிட்டகாங் குடியேறிகள் அல்லது முஸ்லிம் வங்காளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இவர்களே பின்னாள்களில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்னும் அடையாளத்தோடு ஒன்று திரண்டனர். காலனியாட்சி முடிவடைந்தபிறகு இந்தியாவும் பர்மாவும் தனித்தனி நாடுகளாயின. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானும் பிறகு பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷும் பிரிந்து சென்றன. ரோஹிங்கியாக்களின் வேர் பர்மாவில் நிலைகொண்டிருந்தது. பர்மாவையே அவர்கள் தங்கள் தாய்நாடாகவும் கருதினர். இந்த நிமிடம் வரை அவர்கள் தங்களை பர்மாவோடுதான் உணர்வுபூர்வமாகப் பிணைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், பர்மா அவர்களை அந்நியர்களாகவும் வந்தேறிகளாகவும் மட்டுமே பார்க்கிறது. பங்களாதேஷுக்கும் அவர்கள் அந்நியர்கள்தாம். இராக், சிரியா என்று தொடங்கி உலகம் முழுக்கப் பல நாடுகள் அகதிகளை உற்பத்தி செய்து சிதறடித்துக்கொண்டிருக்கின்றன என்றாலும், ரோஹிங்கியா முஸ்லிம்கள் அவர்கள் அனைவரிடமிருந்தும் மாறுபடும் முக்கியமான இடம் இது. ரோஹிங்கியாக்கள் தங்களுடைய சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
இன்னொரு பெருஞ்சோகமும் உண்டு. பர்மாவின் சக்திமிக்கத் தலைவராக இருப்பவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி. மனிதநேயமிக்க ஒரு லிபரலாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அவரும்கூட ரோஹிங்கியா முஸ்லிம்களை அரவணைத்துக் கொள்ளத் தயாராக இல்லை. சூகிக்கு அதிகாரம் கிடைத்தாலாவது நம் நிலையில் மாற்றம் ஏற்படுகிறதா பார்க்கலாம் என்று காத்திருந்த ரோஹிங்கியாக்கள் அவருடைய அசாதாரணமான அமைதியைக் கண்டு ஏமாற்றமும் வேதனையும் அடைந்திருக்கிறார்கள்.
ரோஹிங்கியா முஸ்லிம்களைக் கவலைக் குள்ளாக்கும் இன்னொரு விஷயம், அவர்களிலேயே ஒரு பிரிவினர் ஆயுதம் தாங்கிய குழுவாகத் திரண்டு நிற்பதும் பர்மிய அரசை எதிர்த்துத் தாக்குதல் மேற்கொள்வதும்தான். அரக்கான் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி (ஏ.ஆர்.எஸ்.ஏ) என்னும் பெயரில் இயங்கும் ஒரு சிறு குழு, ரோஹிங்கியாக்களை மீட்கிறேன் என்னும் பெயரில் அவ்வப்போது வன்முறையில் இறங்குவதை அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுவருகிறது. பிரிவினை கோரும் வன்முறையாளர்களைத் தாக்குகிறோம் என்னும் பெயரில் ரோஹிங்கியாக்களின் குடியிருப்புகளைச் சேர்த்தே ராணுவம் அழித்துவருகிறது. அந்த வகையில் அரசு வன்முறை, போராளிகள் என்று சொல்லிக் கொள்ளும் இத்தகைய குழுக்களின் வன்முறை இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொண்டிருக்கும் சாமானிய ரோஹிங்கியாக்கள் இந்த இருவரிடமிருந்தும் தப்பிப்பதற்காகத்தான் உயிரைப் பணயம் வைத்து பர்மிய எல்லையைக் கடந்துகொண்டிருக்கிறார்கள்.
அகதியாக வெளியேறுபவர்களைவிட பர்மா விலேயே தங்கியிருக்கும் ரோஹிங்கியாக்களின் நிலை மோசமாக இருக்கிறது. அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. வங்காளிகள் என்றே அவர்கள் மீண்டும் மீண்டும் அரசால் முத்திரை குத்தப்படுகிறார்கள். வேலை வாய்ப்பு, கல்வி எதிலும் அவர்களுக்கு இடமில்லை. வாக்களிப்பதற்கு வழியில்லை. பௌத்த பர்மிய அமைப்புகளின் வன்முறைத் தாக்குதல்களை அரசு கண்டுகொள்வதில்லை. பெண்கள் தொடர்ச்சியாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.
‘ராணுவம் எங்கள் குடியிருப்புகளைத் தொடர்ந்து தாக்கிவருகிறது. எங்கள் வீடுகள் எரிக்கப்படுகின்றன. எல்லோரும் கடும் உளைச்சலில் மூழ்கியிருக்கிறோம். தற்கொலை செய்துகொள்வதுதான் எங்களுக்கான ஒரே தீர்வா?’ என்கிறார்கள் ரோஹிங்கியா மக்கள்.
நன்றி - விகடன்
0 comments:
Post a Comment