//]]>

Sunday, October 1, 2017

யாழ். புன்னாலைக்கட்டுவனில் பால் உற்பத்தியாளர் சங்கம் அங்குரார்ப்பணம்(Photos)


மீள் குடியேற்றக் கிராமமான யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியில் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில்  பால் உற்பத்தியாளர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கான நிகழ்வு  இன்று ஞாயிற்றுக்கிழமை(01) முற்பகல் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய முன்றலில் கிராம சேவகர் ப. பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது

இந்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு பால் உற்பத்தியாளர் சங்கத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து  வைத்துள்ளார். குறித்த பால் உற்பத்தியாளர் சங்கம் கிராமிய, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள மில்கோ நிறுவனத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அங்குள்ள பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு குளத்தடி நாச்சிமார் கோயில் தலைவர் ச. குகாந்தசர்மா,  மில்கோ நிறுவனத்தின் யாழ். மாவட்டப் பண்ணைப் போதனாசிரியர் வா. தயாபரன், மில்கோ நிறுவனத்தின் யாழ். மாவட்ட ஒன்றியச் செயலாளர் ரி. திருமுகராஜா, புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும், சமாதான நீதவானுமான இ. கெங்காதரன்,  புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலையத் தலைவர் இ. விஷ்ணு ரஞ்சன்,  புன்னாலைக்கட்டுவன் வடக்குப்  பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் சிவதாசன் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன. 

வடக்கு மாகாண விவசாய அமைச்சராக அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட க. சிவநேசன் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலையம் சார்பாகவும் கிராமப் பொதுமக்கள் சார்பாகவும் பொன்னாடை அணிவித்துக் கெளரவிக்கப்பட்டார்.  

 இந்த நிகழ்வில் குப்பிளான் வடக்கு முன்னாள் கிராம சேவகர் ஞான சபேசன் புன்னாலைக்கட்டுவன்  வடக்குப் பிள்ளையான் கட்டு இந்து மயானத் தலைவர் க. தர்மலிங்கம்,  புன்னாலைக்கட்டுவன் வடக்கு முன்னாள் கிராம சேவகர் ஆ. ரஜீவன் உட்படப் பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

இதேவேளை, மீள்குடியேற்றக் கிராமமான புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியில் யுத்தத்திற்குப் பின்னர் முதன்முதலாகப் பால் உற்பத்தியாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் பால் உற்பத்தியாளர்களைக் கொண்ட கிராம மக்கள் பெரிதும் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment