//]]>

Monday, September 4, 2017

சர்ச்சைகளுக்கு மத்தியில் யாழில் அதிரடியாக வெளிவந்தது 'கேரள டயரீஸ்' (Photos)


சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கப்பட்டுள்ள 'கேரள டயரீஸ்' நூலின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(03) பிற்பகல் யாழ்.நகரில் அமைந்துள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில் ஊவா வெல்லஸப்  பல்கலைக்கழக சிரேஷ்ட பதிவாளர் இ. சர்வேஸ்வரா தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் காலைக் கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், மூத்த ஊடகவியலாளருமான என். வித்தியாதரன் தொடக்கவுரையை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து நூலாசிரியர்  நூலைச் சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைத்தார். 

காலைக் கதிர் பத்திரிகையின் ஆசிரியரும், மூத்த ஊடகவியலாளருமான என். வித்தியாதரன் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நூலின் சிறப்புப் பிரதிகளை மூத்த  எழுத்தாளர் சேந்தன், எழுத்தாளர்களான சி. கருணாகரன், மீராபாரதி, தமிழ் மிரர் பத்திரிகை ஆசிரியர் ஏ.பி. மதன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.  

நூல் தொடர்பான பத்திரிகை  ஆசிரியர் பார்வையை  தமிழ் மிரர் பத்திரிகையின் ஆசிரியர் ஏ.பி. மதனும், இலக்கியப் பார்வையை எழுத்தாளர் சி. கருணாகரனும், நாடோடிப் பார்வையை எழுத்தாளர் மீராபாரதியும், நட்புப் பார்வையை நூலாசிரியரின் பள்ளித் தோழன் அமரேசும் நிகழ்த்தினர். தொடர்ந்து நூலாசிரியரின் ஏற்புரை இடம்பெற்றது. 

'கேரள டயரீஸ்' நூல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில்  வெளியிடப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும் நூல் தொடர்பான சரியான புரிதல் இல்லாமையால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலர் இந்த  நூலை அங்கு வெளியிடுவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இதனால், கல்லூரியின் பழைய மாணவரான நூலாசிரியர்  குறித்த நூலை வெளியீடு  செய்வதற்கான அனுமதி கல்லூரி நிர்வாகத்தால் மறுக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெறும் இடம் திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் குறிப்பிட்ட சிலரின் வருகையுடன்  நூல் வெளியீடு வெற்றிகரமாக நடந்தேறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment