தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பான கருத்துப் பகிர்வும், பிரகடனம் வெளியீடும் இன்று செவ்வாய்க்கிழமை(05) முற்பகல்-09.45 மணி முதல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
வடமாகாண முதலமைச்சரும், தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவருமான சி. வி. விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சட்டத்துறைத் தலைவர் குமாரவடிவேல் குருபரன், அரசியல் ஆய்வாளர்களான சி. அ. யோதிலிங்கம், ம. நிலாந்தன் , கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரைகள் நிகழ்த்தினர்.
இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் இறுதியில் கலந்து கொண்ட மக்களின் கருத்துக்களின் முடிவாகப் பிரகடனமொன்றும் சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வானது, இந்த இனப்பிரச்சினையின் அடிப்படைக்காரணிகளை இனம்கண்டு நிரந்தரமாகத் தீர்ப்பதாக அமைய வேண்டும், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான, மதச் சார்பற்ற சமஸ்டித்தீர்வே இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்பதோடு இலங்கைத்தீவின் கௌரவமும் சமாதானமும் மதிக்கப்பட்டு சகல இனங்களும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவும் வல்லது.
இது தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசை என்பதும் பல தசாப்தங்களாக தேர்தல்களில் வழங்கிய ஆணைகள், திம்பு பிரகடனம் போன்ற சர்வதேச பிரகடனங்கள், பொங்குதமிழ், எழுகதமிழ் போன்ற மக்கள் எழுச்சி நிகழ்வுகள் மூலமும் மிகத் தெளிவாகப் பல தடவைகள் வெளிப்படுத்தப்பட்ட ஜனநாயக விருப்புமாகும் எனத் தமிழ்மக்கள் பேரவையால் வெளியிடப்பட்டுள்ள பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment